மஞ்சளில் இலைப்புள்ளி, கிழங்கு அழுகல் நோயை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் யோசனை

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, கிழங்கு அழுகல் நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்த மான்கோசெம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை தெளிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் யோசனை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் பாசனப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிரில் ஆங்காங்கே இலைப்புள்ளி (செம்பொறியான்) நோயின் தாக்கம் பரவலாகத் தென்படுகிறது. தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக இந்நோய் வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே, மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோயின் தாக்கம் தென்பட்டால் உடனடியாக கார்பன்டஸிம் (பாவிஸ்டின்) என்ற மருந்தினை ஏக்கருக்கு 200 கிராம் அல்லது மான்கோசெம் (டைத்தேன் எம்45) என்ற மருந்தினை ஏக்கருக்கு 400 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு என்ற மருந்தினை ஏக்கருக்கு 500 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்து இந்நோயை கட்டுப்படுத்தலாம்.

மேலும் இந்தப் பருவ மழைக்கு மஞ்சள் கிழங்கு அழுகல் நோயின் தாக்குதலும் வர வாய்ப்பு உள்ளதால், வயலில் நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி தேங்கும் நீரை உடனடியாக வடிக்கச் செய்திட வேண்டும். மஞ்சள் வயல்களில் நீரின் தேக்கம் இருக்கக் கூடாது.
மேலும் இக்கிழங்கு அழுகல் நோய் தென்பட்டால் காப்பர் ஆக்ஸிகுளோரைடு என்ற மருந்தினை 2.5 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் நன்றாக கலந்து கிழங்கு அழுகல் நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரின் வேர்ப்பகுதி நன்றாக நனையும் வரை நிலத்தில் ஊற்றிட வேண்டும்.


மேலும் மஞ்சள் கிழங்கு அழுகல் நோய் தாக்கப்பட்ட பயிர்களுக்கு அருகில் உள்ள செடிகளுக்கும் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மஞ்சள் இலைப்புள்ளி நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

இது குறித்த விவரங்களை அறிய விவசாயிகள் தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் மற்றும் வட்டார வேளாண்மை தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports