வாழைச் சாகுபடி


உலகில் இருவகையான வாழைகள் உள்ளன. காயாக சமையலுக்கு பயன்படுவது வாழைக்காய் (plantain), பழமாக உண்ணப்படுவது வாழைப்பழம் (banana). பழ வகை தாவரங்களில் வாழைமரம் மட்டுமே ஒருவிதையிலைத் தாவரமாகும். மற்றைய பழமரங்கள் இருவிதையிலைத்தாவரங்களாகும். பழவகை வாழை நல்ல திரண்ட உருளை வடிவ பழங்களைக் கொண்டிருக்கும். காய்வகை வாழைகள் நீளமாக இருந்தாலும் சற்று பட்டையான பக்கங்களுடன் இருக்கும்.


மனிதன் முதலில் பயன்படுத்திய பல காட்டுவாழை இனங்களின், பழங்கள் விதையுடன் இருந்தன. இவற்றுள், முக்கியமானது மூசா அக்கியூமினாட்டா (Musa acuminata)என்னும் வகை ஆகும். இந்தியாவில் மூதாதைய காட்டுவாழைகள் மூசா பால்பிசியனா (Musa balbisiana) விதையுடன் இருந்தன. ஆனால், இவை பூச்சிமற்றும் நோய் தாங்கும் குணமுடையவை. இயற்கையாகவே இவ்விரு சிற்றினங்களும் கலந்து விதைகளற்ற நற்குணங்களுடன் முப்படை மரபணுத்தாங்கிகளுடைய வாழை இனங்கள் உருவாயின மூசா சாப்பியென்ட்டம் (Musa X sapientum). பின்னர், இவை நிலத்தடி வாழைக்கிழங்கு மூலம் இனவிருத்தி செய்யப்பட்டன.

தற்போது வாழை இனங்கள் தங்களின் மூல சிற்றினங்களை குறிக்கும் விதமாக AA, BB, AB, AAA, AAB, ABB அல்லது BBB என அழைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில், A என்பது மூசா அக்கியூமினாட்டாவையும் (M.acuminata) B என்பது மூசா பால்பிசியனாவையும்(M.balbisiana) குறிக்கும். அதிக அளவில் B மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைக்காய்' இனத்தையும், அதிக அளவில் A மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைப்பழ' இனத்தையும் சேரும்.

தட்பவெப்பம்

நீர் அதிகம் கிடைக்கும், நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் வாழை நன்றாக வளரும். வெப்பநிலை 20 - 30 °C இருப்பது நல்லது. 10 °Cக்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். உறைபனி வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும். மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழை விவசாயியின் முக்கிய இடர் (பிரச்சினை). மணிக்கு 30 - 50 கி.மீ வேகமான காற்று, வாழை இலைகளையும், சில சமயம் வாழைக்குலையையும் உடைத்துவிடும். 60 - 100 கி.மீ விரைவுக் காற்றில் மரங்கள் முறிந்து சாய்ந்து வாழைத்தோட்டமே சீர்குலைந்து விடும்.

மண்

வாழை பலவிதமான மண்வகைகளில் வளரும் தன்மையுடையது. ஆனால், நல்ல வடிகால் வசதி தேவை. நிலம் சற்றேகாடித்தன்மையுடன் (அமிலத்தன்மையுடன்) இருப்பது அவசியம் (காரக்காடித்தன்மை சுட்டெண் pH 6.0). நீர் தேங்கக்கூடிய நிலமாக இருப்பின், உயர்த்தப்பட்ட வரப்புகளில் வாழை நடலாம்

வாழைக்கன்றுகள்

வாழைக்கன்றுகள் வாழைக்கிழங்கிலிருந்து வளர்கின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது. நடுமுன் இம்முளைகளை வெந்நீரிலும், பூச்சி மருந்துகளிலும் நனைக்கின்றனர். இதன்மூலம் நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைகிறது. திசு வளர்ப்பு முறையிலும் இப்போது வாழைக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. சில பயிர்த்தொழிலாளர்கள் முழுக்கிழங்கையும் நடுகின்றனர். இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும். இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்.


தோட்டம் அமைத்தல்

வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தைப் பொறுத்து ஏக்கருக்கு 400-800 வீதம் நடப்படுகின்றன. வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும். முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு குருத்துகள் மட்டுமே வளர விடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6-8 மாதங்களுக்குப் பின் பழம் தர வல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் வேறு குருத்துக்கள் வளர்வதால் சில ஆண்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும். காற்றினாலோ,வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டுவதுண்டு

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports