மண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள்


நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் வேளாண் நிலங்கள் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுவது வேகமாக நடந்து வருகிறது. இதனால் குறைந்த நிலத்தில் சாகுபடி செய்து, நிறைந்த மகசூலைப் பெற வேண்டிய கட்டாயம் தமிழகத்தில் உருவாகிக் கொண்டு வருகிறது.
இதற்காக பசுமைப் புரட்சி என்ற பெயரில் அதிகப்படியான ரசாயன உரங்களையும், கடுமையான நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளையும், வேளாண் துறையின் பரிந்துரையின் பேரில், விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கினர். அதன் விளைவாக இன்று மக்கள் சாப்பிடும் உணவே, விஷமாக மாறியிருக்கிறது.
இயற்கை வேளாண்மையை என்று புறக்கணித்தோமோ அன்றே மக்களின் ஆரோக்கியமும் புறக்கணிக்கப்பட்டு விட்டது. மீண்டும் மனிதன் மருத்துவர்களை நாடி, கடுமையான பக்க விளைவுகளைக் கொண்ட மருந்துகளைச் சாப்பிட்டு நிரந்தர நோயாளிகளாகி விடுகிறான். எனவே அடுத்த தலைமுறையாவது ஆரோக்கியத்துடன் வாழ, மீண்டும் மனிதன் இயற்கை வேளாண்மைக்கும் திரும்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இதனால் வேளாண் துறையும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்குப் பரிந்துரைத்து வருகிறது.
இயற்கை வேளாண்மையின் அடிப்படை பசுந்தாள் உரங்கள்.
 • பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்துவதால், மண் அமைப்பு மேம்படும்.
 • மண்ணில் நீர்ப் பிடிப்பை அதிகரிக்கும். மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கும்.
 • பசுந்தாள் உரங்கள் என்பது பசுமையன சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துவது.
 • இதை இருவழிகளில் பெறலாம். பசுந்தாள் பயிர்களை வளர்த்தும், இயற்கையாக காடுகளில் வயல் வரப்புகளில், தரிசு நிலங்களில் கிடைக்கும் செடிகள் மூலமாகவும் பெறலாம்.
 • வளர்க்கப்படும் முக்கியமான பசுந்தாள் உரப் பயிர்கள் சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, பில்லிப் பயறு, கொத்தவரை, சீமை அகத்தி ஆகியவை.
 • பசுந்தாள் உரங்கள் ஏக்கருக்கு 25 முதல் 45 கிலோ வரை தழைச் சத்தை மண்ணுக்கு அளிக்கிறது.
 • சணப்பில் 2.3 சதவீதம் தழைச்சத்து, 0.50 சதவீதம் மணிச்சத்து, 1.80 சதவீதம் சாம்பல் சத்து கிடைக்கிறது.
 • தக்கைப் பூண்டில் 3.5 சதவீதம் தழைச்சத்து, 0.60 சதவீதம் மணிச்சத்து, 1.20 சதவீதம் சாம்பல் சத்து கிடைக்கிறது.
 • அகத்தியில் 2.71 சதவீதம் தழைச்சத்து, 0.53 சதவீதம் மணிச்சத்து, 2.21 சதவீதம் சாம்பல் சத்தும் கிடைக்கிறது.
 • பசுந்தாள் உரங்கள் மண்ணில் கனிமப் பொருள்களின் அளவை அதிகரிக்கிறது.
 • மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி, அவற்றின் செயல் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
 • தக்கைப் பூண்டு போன்றவை, களர் நிலத்தை சீரமைக்கும் தன்மை கொண்டது.
 • நெர் பயிருக்குப் பசுந்தாள் உரம் இடுவதால், மகசூல் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும்.
 • பசுந்தாள் உரங்கள் மக்கும்போது உருவாகும் அங்கக அமிலங்கள், நிலத்தில் உள்ள பாஸ்பேட்டுகளை விடுவித்து, பயிருக்குப் பயன்படும் நிலைக்கு மாற்றி விடுகிறது.
 • சணப்பு (குரோட்டலேரியா ஜன்சியா) எல்லா வகை மண்ணுக்கும் ஏற்றது. ஏக்ருக்கு 10 முதல் 15 கிலோ விதை தேவைப்படும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. தண்ணீர் பாய்ச்சும்போது செழிப்பாக வளரும். விதைத்த 25 முதல் 45-வது நாளில் பூக்க ஆரம்பித்ததும், வயலில் மடக்கி உழ வேண்டும். ஏக்கருக்கு 3 முதல் 5 டன்கள் வரை பசுந்தாள் உரம் கிடைக்கும்.
 • தக்கைப் பூண்டு (செஸ்பேனியா அக்குலேட்டா) களிமண், களர் மண், உவர் நிலம், நீர் தேங்கும் நிலம் போன்றவற்றில் வளரக் கூடியது. ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ வரை விதை தேவைப்படும். 4.5 முதல் 8 டன்கள் வரை பசுந்தாள் கிடைக்கும்.
 • பசுந்தாள் உர விதைகளை நிலத்தை நன்றாக புழுதியாக்கி பின்னர் விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை தண்ணீர் பாய்ச்சினால் நன்றாகச் செழித்து வளரும். வளர்ச்சி மற்றும் தழைச்சத்து நிலைப்படுத்தும் தன்மை டி.எஸ்.ஆர்-1 ரகத்தில் மற்ற ரகங்களை விட அதிகமாக இருக்கும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி: தினமணி
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports