அமராவதி பாசன பகுதியில் அரசு கொள்முதல் மையம்: விவசாயிகள் வலியுறுத்தல்

அமராவதி பாசனப்பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு கொள்முதல் மையம் இல்லாததால் இடைத்தரகர்கள் பிடியில் சிக்கி போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் பாசன வசதி பெறும் கல்லாபுரம், கொமரலிங்கம் ராஜவாய்க்கால், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் மூன்று போகங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.


கல்லாபுரம் பகுதியில் 250 எக்டரிலும், மடத்துக்குளம் பகுதியில் 2,500 எக்டரிலும் ஆண்டு முழுவதும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என்ற மூன்று சீசன்களில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது, குறுவை சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கி தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை குறைவு மற்றும் அமராவதி அணையில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடியில் நடவு பணிகள் தாமதமானது.


கடந்தாண்டு அமராவதி பாசனப்பகுதி விவசாயிகள் தேவைக்காக வேளாண்துறை சார்பில் கணியூரில் நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள உலர்களத்தில் ஒரே நாள் மட்டும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பெயரளவிற்கு கொள்முதல் மையம் துவங்கப்பட்டு மூடுவிழா நடத்தப்பட்டது. தற்போது மையம் காணாமல் போயுள்ள நிலையில் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


குறுவை சாகுபடியில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளது. அறுவடை சீசன்களில் கல்லாபுரம் உட்பட அமராவதி பாசனப்பகுதி கிராமங்களை இடைதரகர்கள் முற்றுகையிடுகின்றனர். விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வெளிசந்தைகளில் அதிக விலைக்கு நெல் விற்கப்படுகிறது. உடுமலை பகுதியில் அரசு கொள்முதல் மையம் எதுவும் இல்லாத நிலையில், விவசாயிகள் இடைதரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்கின்றனர்.


தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சாகுபடி செலவு அதிகரித்து, நோய் தாக்குதலால் குறுவை சீசனில் விளைச்சல் குறைந்துள்ளது. இந்நிலையில், செயற்கையாக விலை சரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் அடுத்த சீசனில் நெல் சாகுபடியை கைவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இது குறித்து கல்லாபுரம் பகுதி விவசாயிகள் கூறுகையில், அமராவதி பாசனப்பகுதிகளில் கொள்முதல் மையம் அமைக்க அரசு முன்வரவேண்டும். நிரந்தர மையங்களை அமைத்து தேவையான உலர்களங்கள், இருப்பு வைக்க குடோன்கள் கட்டி தர வேண்டும். இது குறித்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை என்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports