கோழிப் பண்ணை வரலாற்றிலேயே முதன்முறையாக முட்டை ரூ. 2.90

கோழிப் பண்ணை வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழகம் மற்றும் கேரளத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை முட்டை ஒன்றுக்கு ரூ. 2.90 ஆக உயர்ந்துள்ளது.

÷தமிழகத்தில் முட்டை உற்பத்தியின் கேந்திரமாக விளங்குவது நாமக்கல் மண்டலம். இங்கு, 800-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. தினமும் 2.87 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியில் 10 சதம் முட்டைப் பவுடர் தயாரிப்புக்கும், வாரம் 3.25 கோடி முட்டைகள் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கும் அனுப்பப்படுகின்றன. மீதமுள்ளவை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

÷முட்டை விலையை நிர்ணயம் செய்ய நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) இயங்கி வருகிறது. பிற மாநிலச் சந்தைகளின் நிலவரம், முட்டையின் நுகர்வு, உள்ளூர் விற்பனை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். புரட்டாசி மாதம் மட்டும் முட்டை ஒன்றின் விலை ரூ. 2.50-ஆக நீடித்திருந்தது.

÷புரட்டாசி முடிந்து வடகிழக்குப் பருவமழை, தீபாவளி ஆகிய காரணங்களால் விலை உயரத் துவங்கியது. கடந்த 2 வாரத்தில் 40 காசுகள் வரை விலை உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் திங்கள்கிழமை கூடிய என்இசிசி விலை நிர்ணயக் குழுவானது முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ. 2.90 ஆக உயர்த்தி அறிவித்தது (முந்தைய விலை ரூ. 2.85).

÷வடகிழக்குப் பருவமழையால் வட மாநிலங்களில் முட்டையின் நுகர்வு அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது. இதேபோல், தமிழகம் மற்றும் கேரளத்திலும் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளதால் முட்டை விலை ரூ. 2.90 ஆக உயர்ந்துள்ளது. கோழிப் பண்ணை துவங்கிய கடந்த 35 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச விலையாகும். கடந்தாண்டு நவம்பரில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 2.88-ஆக இருந்தது. இதன் பிறகு ரூ. 2.90 என்பதே அதிகபட்ச விலையாகும். இந்த விலை உயர்வானது கோழிப் பண்ணையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் நாள்களிலும் விலை உயர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports