திராட்சை விளைச்சலும், விலையும் அமோகம்

பருவமழையின் தாக்கம் குறைவாக இருந்ததால், திராட்சை சாகுபடி விவசாயிகளுக்கு தித்திப்பாக இருந்தது. திராட்சைக்கு நல்ல விலையும் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திராட்சை விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு சோதனை ஏற்படும். விளைச்சல் இருந்தால் விலை இருக்காது. விலை இருந்தால் விளைச்சல் இருக்காது. பூச்சி தாக்கும்; மழையில் சேதமடையும். இப்படி பல சோதனைகளை ஒவ்வொரு ஆண்டும் சாந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், இந்த முறை, அத்தி பூத்தாற்போல் திராட்சை விவசாயம் சரியாக அமைந்தது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே, ஆறுமுகக்கவுண்டனூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, செல்லப்பகவுண்டன்புதூர், கரடிமடை, பூலுவபட்டி, தீனம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை பயிரிடப்படுகிறது. ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் திராட்சைகள் அழுகி வீணாகியதோடு, அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டது.

பழங்களில் காய்சாம்பல், கருஞ்செவட்டை நோய்கள் தாக்கியது. இதனால், திராட்சை பயிரிட்ட பூமியின் ஈரப்பதத்தால், 65% திராட்சை உற்பத்தி பாதிக்கப்பட்டது. வழக்கமாக, கோவை மார்க்கெட், கேரளா பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திராட்சை பழங்களின் எண்ணிக்கை 30 டன்னிலிருந்து, 15 டன்னுக்கும் கீழ் குறைந்தது.

அழுகியதெனக்கூறி அறுவடை பழங்கள் திருப்பி அனுப்பினர். எப்போதும் பருவமழை சீசனில், மழையின் தாக்கத்தால் திராட்சை உற்பத்தி பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்படுவது இயல்பு. இந்தாண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யவில்லை. சில மாதங்களாக, பருவமழையின் தாக்கம் குறைந்து வெயில் அடித்தது. திராட்சை விளைச்சல் நன்றாக இருந்ததோடு, விலையும் கிடைத்துள்ளது. வழக்கமாக, பருவமழை சீசனில் மார்கெட்டுக்கு கொண்டு செல்லப்படும், பழங்களின் எண்ணிக்கையை காட்டிலும் கூடுதலாக உள்ளது. நாளொன்றுக்கு, 25 டன் முதல் அதிகபட்சமாக 35 டன்வரை திராட்சை பழங்கள் கோவை, கேரளா பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பழத்துக்கு, கூடுதல் விலை கிடைத்துள்ளதால் திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1985-2000ம் ஆண்டுவரை, இப்பகுதியில், 2,000 ஏக்கருக்கு மேல் திராட்சை சாகுபடி இருந்தது. தினமும், 75 டன் முதல் 95 டன்வரை திராட்சை பழங்கள் உற்பத்தியானது. தற்போது இந்த விவசாயம் பாதியாக குறைந்துள்ளது.

திராட்சை பயிருக்கு முதலீடு அதிகம் என்பதால், பல விவசாயிகள் பயிரிட முடியவில்லை. ஒரு ஏக்கருக்கு கல்கால், கம்பி, பந்தல், கொடிமர நடவு, ஆள்கூலி என , மூன்று லட்சத்துக்கு மேல் செலவுசெய்து, பயிர்செய்ய முடியாத நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

திராட்சை சாகுபடி தொழில்நுட்ப ஆலோசகர் மாணிக்கம் கூறுகையில், தற்போது அறுவடை கட்டத்தை எட்டியுள்ள திராட்சை பயிர்களுக்கு, பூச்சி மற்றும் நோய்தாக்குதலிருந்து போதுமான பயிர்பாதுகாப்பு முறையை சீரிய முறையில் செய்தால் கூடுதல் மகசூலை விவசாயிகள் பெறலாம்.

பறவை, வவ்வால்கள், தேனீக்கள் போன்றவையின் தாக்குதலில் இருந்து, திராட்சை பழங்களை பாதூக்க "மேற்புறவலை' அமைத்தால் மிகவும் நல்லது. திராட்சை சாகுபடியை விரிவுபடுத்த வங்கி கடனுதவியும் தந்தால், அனுபவமிக்க விவசாயிகளைக் கொண்டு, இன்றைய தொழில்நுட்பத்தோடு, திராட்சை சாகுபடியை, "மீண்டும்' பல ஏக்கருக்கு விரிவுபடுத்தலாம்,''என்றார்.

பருவமழை காலங்களான, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போன்ற மாதங்களில், கடந்த ஆண்டுகளில், ஒரு கிலோ திராட்சையின் விலை ரூ. 8க்கு விற்பனையானது. அதிகபட்சமாக ரூ. 15ஐ தாண்டவில்லை. ஆறு கிலோ கொண்ட திராட்சை பெட்டி ரூ. 42 முதல் ரூ. 50 வரை மட்டுமே விற்பனையானது.

தற்போது, ஒரு கிலோ திராட்சையின் விலை ரூ. 38 முதல், ரூ. 40 வரையும், ஆறு கிலோ கொண்ட திராட்சை பெட்டி ரூ. 210 முதல் ரூ. 220 வரைக்கும் விற்பனையாகிறது. எதிர்பார்த்த விலைக்கும் மேல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நகர மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.


Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports