ஆழியாறு அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பொழிவு குறைந்திருந்தாலும், துணை அணைகளிலிருந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் வரத்துள்ளதால், நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வால்பாறை, நீராறு, சோலையாறு பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இரண்டு மாதம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. அதன்பின் மழை பொழிவு குறைந்ததால், நீர்மட்டம் உயர்வது தடைப்பட்டது. கடந்த வாரம் வால்பாறை, சோலையாறு, நீராறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணைகளின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதில், ஆழியாறு அணைக்கு மேல் ஆழியாறு அணையிலிருந்து நீர்வரத்துள்ளதால், அணை நிரம்பு நிலையை எட்டியுள்ளது. பரம்பிக்குளம் அணையில் 72 அடி உயரத்தில், 51.66 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,296 கனஅடி தண்ணீர் வரத்தும், அணையில் இருந்து 1,105 கன அடி நீர் வெளியேற்றமாகிறது.

ஆழியாறு அணையில் 120 அடி உயரத்தில், 119.50 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 375 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. மேல் ஆழியாறு அணையிலிருந்து 278 கன அடி தண்ணீர் வரத்தாகவுள்ளது. அணையில் இருந்து 293 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில், ஆழியாறு அணையில் இருந்து ஆற்றில் 186 கனஅடியும், ஸ்பில்வே வழியாக ஆற்றில் 107 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் 60 அடி உயரத்தில் 36.94 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 632 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 1,246 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது. அமராவதி அணையின் 90 அடி உயரத்தில் 48.24 அடி நீர்மட்டம் உள்ளது. அணையிலிருந்து 1,145 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகிறது. பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், "மழை பொழிவு குறைந்து விட்ட நிலையில், ஆழியாறு அணைக்கு நீர்வரத்துள்ளதால், ஓரிரு நாட்களில் நிரம்பும் வாய்ப்புள்ளது.


இன்னும் 0.30 அடி நீர்மட்டம் உயர்ந்தால், அனைத்து மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறந்துவிடப்படும். அணைக்கு தொடர்ந்து நீர் வரத்துள்ளதால், எந்நேரமும் நிரம்பும் வாய்ப்புள்ளது. பி.ஏ.பி., திட்டத்திற்குட்பட்ட மற்ற அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், எதிர்பாராதபடி மழை பெய்து அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்தால் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பி தண்ணீர் வீணாகும்' என்றனர். வால்பாறை: வால்பாறையில் பருவ மழை மீண்டும் குறைந்துள்ள நிலையில் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 145 அடியாக உயர்ந்தது.

கடந்த இரண்டு நாட்களாக வால்பாறையில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து வெயில் நிலவுகிறது. மழைப்பொழிவு குறைந்த நிலையில்160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 145 அடியாக உயர்ந்தது. அணை நிரம்ப 15 அடி நீர்மட்டமே உள்ளது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 70 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மானாம்பள்ளி பவர் ஹவுஸ் வழியாக பரம்பிக் குளத்திற்கு விநாடிக்கு 812 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports