இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தனி சட்டம் வரவேண்டும்: நம்மாழ்வார்


இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.

கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பழத்தோட்டத்தில் இயற்கை விவசாயம் குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமை வகித்தார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:

விவசாய விளை நிலங்களில் பூச்சிகளை கொல்வதற்கு விஷம் கலந்த உரங்களை மண்ணில் இடுகிறார்கள். இதனால், மண்ணின் இயற்கைத் தன்மை போய் விஷத்தன்மை உருவாகியுள்ளது. இந்நிலை மிகவும் ஆபத்தானதாகும். இதனால் இன்னும் கால் நூற்றாண்டுகளில் மண்ணில் இடும் விதைகள் முளைக்காது மடிந்து போகும்.

எனவே, விவசாயிகள் காலத்தே விழித்துக்கொள்ள வேண்டும். நெல் விதைத்து கதிர் வரும்போது ஒரு கதிரில் 140 நெல்மணிகள் இருந்தால் அதனை நாஞ்சில் நாட்டு விவசாயிகள் ஒரு மேனி விளைந்துள்ளது என மகிழ்வார்கள்.

ஆனால், இன்று நாம் விதைக்கும் நெல் ஒரு கதிருக்கு 60 முதல் 90 நெல்மணிகளைத்தான் தருகிறது. காரணம் நாம் நவீன விவசாயத்தை விரும்புகிறோம். பழமை விவசாயமான செடி, கொடி தழைகளை உரமாக பயன்படுத்தும் முறையை மறந்துவிட்டோம்.

இன்று விவசாயத்துக்கு இடும் பொருள்களால் பூச்சிகள் அனைத்தும் கொல்லப்படுகிறது. இதனால் விவசாயத்துக்கு பயன்படும் நல்ல பூச்சிகளும் கொல்லப்படும் நிலை உருவாகியுள்ளது.

விவசாய நிலங்களை பாதுகாக்க கேரளத்தில் உள்ளதுபோல தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் சென்னையில் இருந்து குமரி வரை விளை நிலங்கள் அனைத்தும் அழிந்துபோகும் நிலை உருவாகிவிடும் என்றார் அவர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports