சொட்டு நீர் பாசன குழாயில் உப்பு படிவதால் அடைப்பு

துல்லிய பண்ணையம் திட்டத்தில், மானியத்தில் சொட்டு நீர் பாசனம் செய்யும் நிலங்களில், குழாய்களில் உப்பு படிந்து அடைப்பு ஏற்படுவதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொங்கலூர் பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள 80 சதவீத விவசாயிகள், சொந்த செலவில் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். மீதியுள்ள விவசாயிகள், துல்லிய பண்ணையம் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர்.


தென்னையில் நிலையான வருவாய் கிடைப்பதால், சொட்டு நீர் பாசனம் அமைப்பது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக உள்ளது. அரசு மானியம் கொடுத்தும் மஞ்சள், வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதில் ஆர்வமின்றி இருந்தனர். சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணி மந்தமடைய பண தட்டுப்பாடே முக்கிய காரணம். தற்போது மானியம் போக மீதமுள்ள தொகையை, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று, பாசன சபை தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். கடன் அறிவிப்பால், சான்று பெற வி.ஏ.ஓ., அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வங்கி கடன் அறிவிப்பால் ஏராளமான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர். விவசாயிகள் சொந்தமாக சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிலங்களில், 12 மி.மீ., முதல் 16 மி.மீ., வரை குழாய்கள் அமைத்துள்ளனர்.


இவற்றில் தண்ணீர் செல்வதில் எந்த பிரச்னையும் இருப்பதில்லை. மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்த விவசாயிகளுக்கு, சொட்டு சொட்டாக விழும் வகையில் பாசன குழாய் அமைக்குமாறு நிபந்தனை விதிக்கப்படுகிறது. கிணறுகளில் மூன்றில் ஒரு பங்கு உப்பு தண்ணீராக உள்ளது. நீர் மட்டம் மேலே இருக்கும்போது பிரச்னை வருவதில்லை. கீழே செல்ல செல்ல தண்ணீரில் உப்பு அளவு அதிகரிக்கிறது. இந்த தண்ணீர் குழாய்களில் செல்லும்போது உப்பு படிந்து அடைப்பு ஏற்பட்டு; தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இதனால், பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி இழப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: குறிப்பிட்ட கம்பெனியில் பொருட்களை வாங்கினால் மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது.


எங்கள் விருப்பம் போல் சொட்டு நீர் பாசனம் அமைக்க முடிவதில்லை. அதிகாரிகள், கம்பெனிக்காரர்கள் சொல்லும் முறையில் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அமைக்கும் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. நல்ல தண்ணீர் இருக்கும் பகுதிகளில் பிரச்னை இருப்பதில்லை. உப்பு தண்ணீர் உள்ள கிணறுகளில் பாசனம் செய்பவர்களுக்கு துல்லிய பண்ணைய திட்டம் பெரும் பிரச்னையாக உள்ளது.

உப்பு தண்ணீர் உள்ள பகுதிகளில் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதன் மூலமும், விவசாயிகளே தங்கள் விருப்பம் போல் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும் அனுமதிக்க வேண்டும், என்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports