வெளிச்சம் தேடும் சுண்ணாம்பு தயாரிப்புத் தொழில்!

சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிலுக்கு அரசு உதவிகள் எட்டாக்கனியாகி விட்டதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கை இருளில் முழ்கி கிடக்கிறது.

குடிசைத் தொழில் போல் நடந்துவரும் சுண்ணாம்புத் தொழிலை பாரம்பரியமாக சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். சுண்ணாம்புக் கல்லை வெட்டி எடுத்து, காய்ந்த பனை மர குருத்துகள், கோந்தைகள், விறகுகளை வைத்து சூடுபடுத்தி சுண்ணாம்பு தயார் செய்கின்றனர்.

சுண்ணாம்பு தயாரிக்க ஆகும் செலவுகளை கணக்கிட்டால் மிக குறைந்த தொகைதான் கூலியாகக் கிடைக்கிறது. இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்க்கையோடு போராடி வருகின்றனர்.

வைப்புத்தொகை செலுத்தி அனுமதி பெற்ற பிறகே சுண்ணாம்புக் கல்லை வெட்டி எடுக்க முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. வயிற்றுப் பிழைப்புக்கே வழியில்லாமல் பரிதவித்து வரும் இத்தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வைப்புத்தொகை செலுத்த வழியில்லாததால், ஏற்கெனவே அனுமதி பெற்றவர்களிடம், சுண்ணாம்புக் கல்லை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

கல்லை விலை கொடுத்து வாங்கித் தொழில் செய்வதால், தொழிலில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறவே போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காள வாசல்களை மூடிவிட்டு, கூலித் தொழிலில் ஈடுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. வரும் காலங்களில் இந்த அளவு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுண்ணாம்புக் கட்டிகளை வெட்டி எடுக்கவோ, இத்தொழிலை மேம்படுத்தவோ அரசு எவ்வித மானியமோ, உதவியோ செய்வதில்லை. பெரும்பாலான இடங்களில் கண்மாய்களில் காளவாசல்களை அமைத்து, சுண்ணாம்பு உற்பத்தி செய்கின்றனர்.

மழைக் காலங்களில் கண்மாய்க்குள் தண்ணீர் வந்துவிடுவதால், மூன்று மாதங்கள் வேலையின்றி சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது விலைவாசி உயர்வால் குறைந்த வருமானமே கிடைக்கும் இத்தொழிலில் குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. சுண்ணாம்பு தயாரிக்கும்போது தீக்காயங்கள் ஏற்பட்டு பாதிக்கப்படும் அபாய நிலையும் உள்ளது.

வீடுகள் பொழிவு பெற சுண்ணாம்பு தயாரித்து கொடுக்கும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை படிப்படியாக இருண்டு கொண்டிருக்கிறது.

இத்தொழிலை சீரமைத்து, இத்தொழிலாளர்களின் வாழ்க்கை சிறப்படைய தனி நல வாரியம் அமைக்க அரசு முன் வர வேண்டும் என்பதே வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports