திமுக கூட்டணி: திருமாவளவன் அழைப்புக்கு ராமதாஸ் பதில்


திமுக கூட்டணிக்கு வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன விடுத்துள்ள அழைப்புக்கு பதிலளித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த திருமாவளவன், திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்றும், வடமாவட்டங்களில் கூட்டணி வலிமை பெறுவதற்கு பாமக வரவு பயன்படும் என்றும், எனவே திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸிடம் இது குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாமகவின் நலன் விரும்பி. அவர் எப்போதும் நட்புறவுடன் இருக்க விரும்புபவர். அந்த அடிப்படையில் அவர் எங்களை திமுக அணிக்கு அழைத்துள்ளார். எங்களை பொறுத்தவரை கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் மாற்று அணி அமைய வேண்டும். நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில், மாற்றத்தை தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். மக்களும் அதற்கு தயாராக வேண்டும். மக்கள் விரும்பும் புதிய கூட்டணிக்கு நான் தலைமையேற்கவும் தயாராக உள்ளேன்.

அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்ற சித்தாந்தம் எப்போதும் எல்லோருக்கும் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports