பயிர்க்கடன் பெற விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெற விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி கடன் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டலம் மற்றும் அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இரண்டு பாசன திட்டங்களிலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.சாகுபடி பணிகளுக்கான செலவினங்களுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் பயிர்க்கடனை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனர்.

இந்நிலையில், பயிர்கடன் பெற கூட்டுறவு சங்கங்களில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விண்ணப்பத்துடன் விளைநிலத்தின் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை செய்த முடிவுகளை இணைக்க வேண்டும். கிராமப்பகுதியில் இவ்வகை பரிசோதனைகளை செய்ய எவ்வித வசதியும் இல்லை. இதனால், விவசாயிகள் பரிசோதனைக்காக அலைய வேண்டிய நிலை ஏற்
பட்டுள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்திய பின்னர் இத்திட்டத்தை கட்டாயப்படுத்தலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குழப்பம் ஏற்படுத்தும் காப்பீட்டு திட்டம்: இந்தாண்டு தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து பயிர்களையும் காப்பீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்கடன் பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு திட்டம் ட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தால் கிடைக்கும் பலன்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏழு வட்டாரங்களுக்கு வானிலை சார்ந்த பயிர்க்காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில், சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு பிடித்தம் செய்யப்படும் பிரிமீயம் தொகை ஒராண்டு வட்டிக்கு இணையாக உள்ளது. இவ்வாறு, அதிக தொகை பயிர்க்கடனில் பிடித்தம் செய்யப்படும் நிலையில் இந்த திட்டத்தால் முழுமையான பலன் கிடைக்குமா என்பது விவசாயிகளிடம் கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.உதாரணமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் மக்காச்சோள சாகுபடிக்கு 7 ஆயிரம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இதில், ஏக்கருக்கு 276 ரூபாய் காப்பீடு பிரிமீயமாக பிடித்தம் செய்யப்படுகிறது. பருத்தி சாகுபடி ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் கடனாகவும், 826 ரூபாய் பிரிமீயமாகவும் பிடித்தம் செய்யப்படுகிறது. பருத்திக்காக பயிர்கடன் பெறும் விவசாயி ஒராண்டில் கடன் தொகையை செலுத்த முடியாவிட்டால் அவருக்கு 840 ரூபாய் வட்டியாக கணக்கிடப்படும். இதற்கு இணையாக காப்பீடு பிரிமியம் தொகை 826 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. கட்டாயப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பல்வேறு திட்டங்களின் கீழ் காப்பீடு செய்யும் நிலையில் பயிர்கள் பாதிக்கப்படும் போது நிவாரணம் கிடைப்பதில்லை. வருவாய் உள்வட்டம் முழுவதும் பயிர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே குறைந்தளவு நிவாரணம் கிடைக்கிறது.

தற்போதைய காப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் கிடைப்பதற்காக நடைமுறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கணிசமான தொகை பிடித்தம் செய்யப்படுவதால், செலவினங்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. அரசு இது குறித்து பரிசீலனை செய்து பயிர்கடன் பெற விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்', என்றனர்.புலம்பும் அலுவலர்கள்தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அலுவலர்கள் காப்பீட்டு திட்டத்திற்காக கடன் தொகையில் பிடித்தம் செய்யப்படுவதை விளக்கினாலும் விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால், அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் சிக்கும் அலுவலர்கள் தங்கள் பிரச்னை குறித்து புலம்பி வருகின்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports