புகளூர் பகுதியில் வெற்றிலை விலை வீழ்ச்சி! வருவாய் குறைவு; விவசாயிகள் கவலை

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகளூர் சுற்றுப்பகுதியில் வெற்றிலை உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வெளிமாநில மார்க்கெட் பாதிப்பு காரணமாக வெற்றிலை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கூலிக்குக் கூட கட்டுப்படியாகாத வருவாய் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் புகளூர் சுற்றியுள்ள நொய்யல், சேமங்கி, மரவாபாளையம், கோம்பிப்பாளையம், திருக்காடுதுறை, தோட்டக்குறிச்சி, தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், நன்செய்புகளூர், செம்படாபாளையம் உட்பட்ட பகுதிகளில் 5,000 ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. கற்பூரம், பூங்கொடி, பச்சைக்கொடி, இளங்கால் கற்பூரம், இளங்கால் பச்சைக்கொடி, முதுகால் வெள்ளைக்கொடி சக்கை, முதுகால் கற்பூரசக்கை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வெற்றிலை இங்கு பயிரிடப்படுகிறது.

கடந்தாண்டு பச்சைக்கொடி ரகம் ஒரு மூட்டைக்கு 3,500 முதல் 4,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 1,500 முதல் 2,500 ரூபாய் வரைதான் விலை கிடைக்கிறது. முதுகால் கற்பூர ரகம் வெற்றிலை 2,500 ரூபாய் வரை விற்கப்பட்டவை, தற்போது 20 கவுளிகள் அடங்கிய 2,000 வெற்றிலையை கொண்ட ஒரு கூடைக்கு அதிகபட்சமாக 150 ரூபாய் வரை கிடைக்கிறது. ரகத்தை பொறு த்து விலை குறையவும் வாய்ப்புள்ளது. இதனால் தற்போது கற்பூர ரகம் சார்ந்த வெற்றிலை பதியம் செய்த விவசாயிகள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிலை விவசாயி சுப்பிரமணி கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மூன்றாண்டுக்கு முன்வரை 2,000 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட வெற்றிலை அடிமட்ட விலை க்கு போயுள்ளது. இதனால், தற்போது பறிப்பு கூலி மற்றும் விற்பனை இடத்துக்கு எடுத்துச்செல்லும் சுமைக்கூலி மற்றும் கமிஷன் தொகை போக மீதி கிடைக்கும் தொகை மிகவும் சொற்பமாக உள்ளது. கூலியாட்களுக்கு சம்பளம் கொடுக்கவே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான், குஜராத், டில்லி, ஒரிஸா உள்ளிட்ட மாநிலங்களு க்கு ரயில் மற்றும் லாரிகளில் அ னுப்புவது வழக்கமாக இருந்தது. தற்போது ஆந்திரா, கர்நாட கா, கேரளா மாநிலங்களில் இருந்து வெற்றிலை வரத்து அதிகரித்துள்ளதால், வெளிமாநில மார்க்கெட் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான போட்டி காரணமாக சரியான விலை கிடைப்பதில்லை.

இதனால் சிறு விவசாயிகள், நஷ்டப்படுவதை தவிர்க்க கரூர், பரமத்தி வேலூர், நாமக்கல் உள்ளிட்ட உள்ளூர் மார்க்கெட்டில் தங்கள் உற்பத்தியை விற்பனை செய்ய துவங்கி விட்டனர். இவ்வாறு தொடரும் பிரச்னை காரணமாக, வெற்றிலை விலை கூடுதல் வீழ்ச்சியடைந்து, விவசாயிகளை கவலைப்பட வைத்துள்ளது. அடுத்து வரும் முகூர்த்த காலத்தில் வெற்றிலை விலை உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports