குறுவை நெல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டத்தில் குறுவை நெல் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

÷கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 18 ஆயிரம் ஏக்கரிலும், டெல்டா அல்லாத பகுதிகளில் 26,500 ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஏ.எஸ்.பி. 19, ஏ.எஸ்.பி. 16, டி.கே. 9, ஏ.டி.டி. 36 அதிசயப் பொன்னி உள்ளிட்ட 100 முதல் 105 நாள்களில் அறுவடைக்கு வரும் குறுகிய கால நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு இருந்தன.

÷தற்போது குறுவை அறுவடை முடிந்து விவசாயிகள் சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்கி உள்ளனர். குறுவை நெல்லைக் கொள்முதல் செய்ய, 24 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருந்தன. இவற்றில் குவிண்டால் சன்ன ரகம் ரூ.1100, மோட்டா ரகம் ரூ.1050 என்ற விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 18 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்து இருப்பதாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷குறுவையில் குறைந்த பட்சம் 1.5 லட்சம் டன் நெல் உற்பத்தியாகி இருப்பதாக விவசாய சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே குறுவை அறுவடையில் 15 சதவீதத்துக்கும் குறைவான நெல்லே, அரசு சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று உள்ளன. மீதம் உள்ள நெல் முழுவதையும், தனியார் நெல் வியாபாரிகளே கொள்முதல் செய்து உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

÷தனியார் வியாபாரிகள் பெருமளவு நெல்லைக் கொள்முதல் செய்து இருப்பதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து இருப்பதாக யாராவது கருதினால், அது சரியல்ல என்கிறார்கள் விவசாயிகள். அரசு கொள்முதல் விலையை விட மூட்டைக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை விலை வைத்து, விவசாயிகளிடம் தனியார் நெல் வியாபாரிகள் கொள்முதல் செய்து இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

÷கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை குறுவை நெல், தனியார் வியாபாரிகளால், ரூ.1050 முதல் ரூ.1200 வரை கொள்முதல் செய்யப்பட்டன. ஆயினும் குறுவை அறுவடைக் காலத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், குறுவை நெல் விலை சரிந்து கொண்டு இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள். தற்போது குவிண்டால் ரூ.1000 முதல் ரூ.1100 வரை தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

÷அரசு கொள்முதல் விலையைவிட, தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்தபோதிலும், போக்குவரத்துச் செலவு, சாக்கு பிரச்னை, களத்துக்கே வந்து தனியார் நெல் கொள்முதல் செய்வது, ஈரப்பதத்தை அனுமதிப்பது போன்ற காரணங்களால், அரசு கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுபோகாமல், தனியாரிடம் நெல்லை விற்றுவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

÷எனவே குறுவையைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு அரசு கொள்முதல் விலையை விட குவிண்டாலுக்கு ரூ.50 முதல் ரூ.75 வரைதான் அதிகம் கிடைத்து இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் அறுவடையான சன்னரக பொன்னி நெல்லை சில விவசாயிகள் இருப்பு வைத்து தற்போது விற்பனை செய்கிறார்கள். நன்றாகக் காய்ந்து அதிக அளவு அரிசி கொடுக்கும் நிலையில் உள்ள நெல்லுக்கும், குவிண்டாலுக்கு ரூ.1400 வரைதான் கிடைக்கிறது. இந்த நெல்லுக்கு ரூ.1700 வரை கிடைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

÷கடலூர் மாவட்டச் சந்தைகளில் அரிசி விலை கடந்த 6 மாதங்களாக ஒரே மாதிரியாக இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். சந்தையில் அரிசி குறைந்தபட்ச விலை கிலோ ரூ.17 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.32 ஆகவும் உள்ளது.

÷அரிசி விலை எவ்வளவுதான் உயர்ந்தாலும், விவசாயிகள் விற்கும் நெல்லுக்கு விலை உயர்வதில்லை என்கிறார் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன்.

சீரான அரிசி விலை

குறுவை நெல் விலை சரிந்து உள்ளது. மழை பெய்ததைக் காரணம் காட்டி வியாபாரிகள் நெல் விலையைக் குறைத்து விட்டனர். ஆனால் அதற்கேற்ப அரிசி விலை குறையவில்லை. அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்தினால்தான் விவசாயிகளுக்கு நியாயமான, கட்டுபடியான விலை கிடைக்கும். இல்லையெனில் வியாபாரிகளும் இடைத் தரகர்களும்தான் பயன் அடைவார்கள் என்றார் அவர்
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports