மின்மோட்டார் பெற ஆசைப்பட்டு நிலத்தை அடகு வைத்த விவசாயிகள்

ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் வழங்கும் அரசின் அறிவிப்பை நம்பி, நிலங்களை அடகு வைத்தும், செலவு செய்தும் விவசாயிகளுக்கு கடன் வழங்காததால், மூன்று ஆண்டுகளாக அலைந்து வருகின்றனர்.

"டாப்செட் கோ' மூலம், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் அமைக்க தலா 50 ஆயிரம் ரூபாய் மானியம் மற்றும் கடன் வழங்க, கடந்த 2007-08ல் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள் பலரும் விண்ணப்பித்தனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலவாரியம் மூலம் இதற்கான கலந்தாய்வு, குருந்தாய்வுகள் செய்யப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு அந்தந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதற்காக பங்குத்தொகை 5000 ரூபாய் மற்றும் மோட்டார் அமைய விருக்கும் நிலத்தினை ஐந்து ஆண்டுகளுக்கு அடமானம் வைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மின்மோட்டார் கிடைக்கும் ஆசையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயிகள் பலரும் தங்களின் நிலத்தை அடமானம் வைத்து, கடன் தொகை பெற முன்வந்தனர். நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்ததே தவிர, கடன் வந்தபாடில்லை. சிலருக்கு கிடைத்த நிலையில், எஞ்சியவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.


கடன் தொகை கிடைக்கும் நம்பிக்கையில், பலரும் போர்வெல் போட்ட நிலையில், மின்மோட்டார் பொருத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அரசின் இலவச மின்மோட்டார் அறிவிப்பு வந்ததால், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை முறையிட பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அவ்வழியாக வந்த கலெக்டர் ஹரிஹரனிடம் தங்கள் நிலை குறித்து முறையிட்டனர். செம்பொன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி கூறியதாவது: அரசு தரப்பில் அறிவிப்பை நம்பி மின்மோட்டார் வாங்க மானிய கடனுக்கு விண்ணப்பித்தோம். இதற்காக எங்கள் நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு அடமானம் வைத்து, இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. கடன் கிடைக்கும் ஆசையில் பலரும் போர்வெல் போட்டு, மோட்டார் வாங்க பணமின்றி தவித்து வருகிறோம், என்றார். மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் கல்யாணி கூறியதாவது: இது குறித்து விசாரித்து, விவசாயிகளுக்கு கடன் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports