பட்டுக்கூடு தொழிலில் திடீர் பாதிப்பு : கை கொடுக்கிறது தமிழகம்

கச்சாபட்டு தேவை அதிகரித்துள்ள நிலையில், பட்டுக்கூடு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைக்கிறது. பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு கச்சாபட்டு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது.

பட்டுக்கூடுகள் உற்பத்தியில் சீனா முதலிடமும், இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்தியாவில் ஆண்டிற்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சாபட்டு தேவை உள்ளது. ஆனால், 19 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பட்டுக்கூடு மட்டுமே உற்பத்தியாகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம், காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் பட்டுக்கூடு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. கச்சாபட்டு தேவைக்கு உற்பத்திக்குமான இடைவெளி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஆகஸ்ட் மாதம் துவங்கி நவம்பர் வரை பண்டிகை சீசனுக்காக பட்டுத்துணிகள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால், பட்டுக்கூடுகளுக்கு தேவை அதிகரித்து விலை உயரும். இந்தாண்டு, முக்கிய உற்பத்தி மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தட்பவெப்ப நிலை, நோய்த்தாக்குதல் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சாபட்டு உற்பத்திக்கு தேவையான வெண்பட்டுக்கூடுகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்து, விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றுமுன்தினம் கர்நாடகா மாநிலம் ராம்நகரில் ஒரு கிலோ வெண்பட்டுக்கூடுகளுக்கு 365 ரூபாய் வரையும், தமிழக மையங்களில் 330 ரூபாய் விலை கிடைத்தது. இதுவரை கிடைக்காத அதிகபட்ச விலை கிடைத்தது உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற மாநிலங்களில் உற்பத்தி பாதித்தாலும், தமிழ்நாட்டில் சீரான உற்பத்தி தொடர்கிறது. இந்தாண்டு பருவமழை குறைந்தாலும், மிதமான தட்பவெப்ப நிலை நிலவுவது வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியை பாதிக்காமல் தொடர செய்கிறது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாள்தோறும் 2 ஆயிரம் கிலோ வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியாகின்றன. கூடுகளுக்கு உள்ளூர் மையங்களிலும் நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் மற்றும் மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி செல்வராஜ் கூறியதாவது: வெண்பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால்,வரும் சீசனில் இத்தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நாட்டின் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகளவு இருப்பதால், விலை சரியும் வாய்ப்பில்லை. உள்ளூர் மையங்களில் நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்களுக்கு அலைச்சல் மற்றும் போக்குவரத்து செலவு குறைகிறது. பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports