தொடர் மழையால் விவசாய பணிகள் மும்மரம்! வேலை ஆட்கள் பற்றாக்குறை

தர்மபுரி மாவட்டத்தில் பத்து நாட்களுக்கு மேல் பெய்த மழையால் விவசாய பணிகள் சுறுசுறுப்பு அடைந்த போதும், விவசாய கூலி தொழிலாளர்கள் இல்லாமல் பணிகள் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் பத்து நாட்களுக்கு மேலாக தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. தொடர் மழையால் நீர் ஆதாரங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் பெய்த மழையை தொடர்ந்து பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் உள்ளிட்டவைகள் விதைப்பு பணி முடிந்தது.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதியில் மஞ்சள், குச்சி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனம் மற்றும் ஏரி பாசன பகுதியில் ஜூலை முதல் வாரத்தில் நெல் நாற்று விதைப்பு பணிகள் நடந்தது. தற்போது, நெல் நாற்றுக்கள் நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பெய்துள்ள தொடர் மழையை தொடர்ந்து நிலத்தில் ஈரத்தன்மை நிலவுவதால், பயறு வகை பயிர், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முதல் கட்ட களை எடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்கள் போல் விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழை விவசாய பணிக்கு கைகொடுத்த போதும், மழைக்கு பின் வெயில் கொளுத்துவதால், விவசாயிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர். தற்போதைய மழையால் பல்வேறு செடிகள் நல்ல வளர்ச்சி பெற்றாலும், பயறு வகை பயிர்களில் பூக்கள் பூக்கும் தருணத்தில் மீண்டும் மழை பெய்தால், நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து தர்மபுரி பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது: கடந்த காலங்களில் ஆண்டு முழுவதும் விவசாய பணிகள் தொடர்ந்து நடந்து வரும். தற்போது, மழை பெய்யும் நிலை பொருத்து விவசாய பணிகள் இருப்பதாலும், விவசாய பணிக்கு கூலி குறைவாக கிடைப்பதாலும், பெரும்பாலான கிராம கூலி தொழிலாளர்கள் நகரப்பகுதியில் கட்டிட பணிக்கும், ஹோட்டல் பணிக்கு சென்று விடுவதால், கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, என்றார்.

தொடர் மழை விவசாயத்துக்கு கை கொடுத்த போதும், பல இடங்களில் மானாவாரி மற்றும் கிணற்று பாசன பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சூரிய காந்தி பயிருக்கு மழை ஏற்புடையதாக இல்லை. இதனால், பூக்கும் பருவத்தில் வளர்ந்திருந்த சூரியகாந்தி செடிகளில் பூக்கள் மழைக்கு அழுகி வீணாகி போனதால், சூரியகாந்தி பயிர் செய்த விவசாயிகளுக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கிணற்று பாசன பகுதியில் நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் கூடியிருந்த போதும், சொட்டு நீர் பாசன முறைகளில் பாசன முறையை கையாளும் விவசாயிகளுக்கு தற்போதைய மழை ஆறு மாதங்கள் வரையில் கை கொடுக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports