பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக அரசு

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வழங்கும் சலுகைகளைப் பெற ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 16 ஆயிரம் என்பது 40 ஆயிரமாகவும், நகர்ப்புறங்களில் 24 ஆயிரம் என்பது 60 ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இலவச வீட்டு மனைகள், தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் போன்றவற்றை வழங்கும் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு 12 ஆயிரம் என்றிருந்தது. 2000-ல் இந்தத் தொகை கிராமப்புறங்களில் 16 ஆயிரம் என்றும், நகர்ப்புறங்களில் 24 ஆயிரம் என்றும் உயர்த்தப்பட்டது. அதன்படி, பயனாளிகளுக்கு வீட்டுமனைகளும், தையல் இயந்திரங்களும், சலவைப் பெட்டிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

வருமான வரம்பு உயர்வு: இந்தத் திட்டத்தின்கீழ், அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெறக் கூடிய வகையில், வருமான உச்சவரம்பை மேலும் உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் வீட்டுமனைகள், தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ஆகியவற்றைப் பெறுவதற்குப் பயனாளிகளின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் இப்போதுள்ள 16 ஆயிரம் என்பது 40 ஆயிரமாகவும், நகர்ப்புறங்களில் இப்போதுள்ள 24 ஆயிரம் என்பது 60 ஆயிரமாகவும் உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

யார் யாருக்கு திட்டங்கள்: இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டிகள் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களைப் பெற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

தையல் இயந்திரம் பெற வேண்டுமெனில், தையல் கலை தெரிந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்களுக்கு மட்டுமே சலவைப் பெட்டிகள் அளிக்கப்படும். வீடோ அல்லது வீட்டு மனையோ வைத்திருக்காத பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports