இணையப் பயன்பாடு மும்மடங்கு அதிகரிக்கும்

வரும் 2015ம் ஆண்டில், இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும் என, அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. அமெரிக்கா, பாஸ்டனில் உள்ள மேலாண்மை ஆலோசனை நிறுவனம், உலக அளவிலான இன்டர்நெட் பயன்பாடு குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது. "இன்டர்நெட்'ஸ் நியூ பில்லியன்' என்ற தலைப்பில், ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2009ல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, இந்தோனேசியா (பிரிசி) ஆகிய நாடுகளில், 61 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்தினர். அதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும், எட்டு கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில், இது 7 சதவீதம். 2009 முதல் 2015 வரையில், ஒவ்வொரு ஆண்டும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்த நாடுகளில் 20 சதவீதம் அதிகரிக்கும்.

வரும் 2015ல், இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு எண்ணிக்கை, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும். அதாவது, 23 கோடியே 70 லட்சம் பேர் இன்டர்நெட் பயன்படுத்துவர். வரும் காலத்தில் டிஜிட்டல் சந்தையை உருவாக்க உள்ள இளைஞர்கள் இடையில் இன்டர்நெட் பயன்பாடு, ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதிகரிக்க உள்ளது. அமெரிக்கா, ஜப்பானை விட இந்தியாவின் இன்டர்நெட் சந்தை மிகவும் வித்தியாசமானது. அதிக பக்குவமில்லாத, அதே சமயம் நன்கு வளர்ச்சி கண்ட சந்தையாக இந்தியா உள்ளது. பெரிய நகர்களில் மட்டும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஆனால், சிறிய கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறும் மக்களுக்கு, இன்டர்நெட்டை முழுவீச்சில் பயன்படுத்தத் தெரியவில்லை. இளைஞர்கள் அவர்கள் குறையை நிவர்த்தி செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக அரை மணி நேரம் இன்டர்நெட்டில் செலவிடுகின்றனர்.

ஒட்டுமொத்த இன்டர்நெட் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்தாலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக இன்டர்நெட்டை பயன்படுத்தும் நேரக்கணக்கில், இந்தியர்கள், மற்ற நாடுகளை விட பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். "பிரிசி' நாடுகளில், இன்டர்நெட்டை விட மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. தகவல் பரிமாற்றம், விளையாட்டு, சினிமா ஆகியவற்றை மொபைல் போனிலேயே பெற்று விடுவதால், இன்டர்நெட் பயன்பாடு, இந்த நாடுகளில் குறைந்தே காணப்படுகிறது.

மொபைல் போன் பயன்பாட்டை பொறுத்தவரை, இந்தியாவில் பேச்சுப் பரிமாற்றம் மற்றும் குறுந்தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே, அவை பயன்படுத்தப்படுகின்றன. இதில் குறுந்தகவல் சேவை பயன்படுத்துவோர் 50 கோடி பேர். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 3ஜி சேவை துவங்கியதும், இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கிறோம். "பிரிக்' நாடுகளில் மொத்தம் 100 கோடியே 80 லட்சம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மொத்தம் 39 கோடி பேர் தான் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இத்தகவல்களை, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports