பயனின்றிக் கிடக்கும் வருவாய்த் துறை நிலம்

மணப்பாறை பேருந்து நிலையம் அருகே முள் புதராக பயனின்றிக் கிடக்கும் வருவாய்த் துறை நிலம், நகராட்சிக்கு கிடைத்தால், அதன்மூலம் அந்த நிலம் பயன்பாட்டிற்கு வருவதோடு, நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

மணப்பாறை நகரின் பிரதான பகுதிகளில் பேருந்து நிலையம், பயணியர் விடுதி, நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என அரசுத் துறை அலுவலகங்களாகவே உள்ளன. நகர்ப் பகுதியில் தனி நபர் இடம் மிகக் குறைவாகவே உள்ளது.

இதனால், தரைக் கடைகளும், தள்ளுவண்டிக் கடைகளும் நிறைய உள்ளன. மேலும், சாலையோரங்களை ஆக்கிரமிக்கும் திடீர் கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை இரு வேளைகளிலும் பள்ளி மாணவர்கள்கூட சாலையைக் கடக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் எதிரில், பயணியர் விடுதியின் அருகே 1.5 ஏக்கர் அரசு நிலம் எந்தவித பயன்பாடும் இன்றி புல், புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த நிலம் மருங்காபுரி ஜமீனுக்குச் சொந்தமானது. இதில் சரசுவதி வாசகசாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருந்தது.

நாளடைவில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கேளிக்கை விளையாட்டுகள் விளையாட தனிநபர்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தின் மூலம் இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. பிறகு, கையகப்படுத்தப்பட்ட இடத்தில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகமும், வருவாய் ஆய்வாளர் அலுவலகமும் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், அந்த அலுவலகங்கள் இடம் மாற்றப்பட்டன. இதனால், முறையான பராமரிப்பின்றி அந்த வளாகத்தில் நல்ல நிலையில் இருந்த கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுதவிர, அந்த வளாகம் முழுவதும் முள் செடிகள் சூழ்ந்து, விஷ ஜந்துகள் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. மேலும், குப்பைகளும், உணவகக் கழிவுகளும் கொட்டப்பட்டு, பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவித்து வருகிறது இந்த இடம். இந்த இடத்தை வருவாய்த் துறையினரிடமிருந்து பெற்று, வணிக வளாகம், திருமண மண்டபம் கட்ட நகராட்சி நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், வருவாய்த் துறை உயர் அலுவலர்கள் இந்த இடத்தை நகராட்சிக்குத் தருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சித் துறை அமைச்சகத்தின் மூலம் பல முறை முயன்றும் இந்த இடம் நகராட்சிக்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த இடத்தில் வணிக வளாகம் கட்டி, சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைக்காரர்களுக்கு குறைந்த வாடகைக்கு கொடுப்பதன் மூலம், நகராட்சிக்கு வருமானம் கிடைப்பதோடு, போக்குவரத்து நெரிசல், பொது சுகாதாரக் குறைபாடுகள் குறையும் எனக் கருதப்படுகிறது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports