சுண்ணாம்பு பவுடர் தட்டுப்பாடு பண்ணையாளர்கள் கவலை

கோழிப்பண்ணையில் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு பவுடருக்கு பல்லடத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; இதன் காரணமாக, காங்கயம், உடுமலை பகுதிக்குச் சென்று கூடுதல் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல்லடம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 3,000க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. பண்ணையை தூய்மைப்படுத்தவும், பண்ணைகளில் கிருமி நாசினியாகவும் சுண்ணாம்பு பவுடர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்லடம், அவினாசிபாளையம், காரணம்பேட்டை, காமநாயக்கன்பாளையம் உட்பட எட்டு இடங்களில் மட்டுமே சுண்ணாம்பு சூளைகள் உள்ளன. இவைகளில் நான்கு சூளைகள் சுண்ணாம்பு பவுடர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு கற்கள் விலை உயர்வு, சூளையில் எரிக்க பயன்படுத்தப்படும் நிலக்கரி விலை உயர்வு, கூலித்தொழிலாளர்கள் கிடைக்காமை ஆகிய காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மூடப்பட்டன.
மீதமுள்ள நான்கு சூளைகளில் இரண்டு சூளைகள் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இரண்டு சூளைகள் மட்டுமே உள்ளதால் போதிய அளவு சுண்ணாம்பு பவுடர் பல்லடம் பகுதியில் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு கிடைக்கவில்லை. பல்லடத்தில் சுண்ணாம்பு பவுடர் தட்டுப்பாடு காரணமாக, காங்கயம் மற்றும் உடுமலை பகுதிகளில் உள்ள சூளைகளில் சுண்ணாம்பு பவுடரை பண்ணையாளர்கள் வாங்கி வருகின்றனர். பல்லடத்தில் ரூ.70 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு பெட்டி சுண்ணாம்பு பவுடர், காங்கயம், உடுமலை பகுதிகளில் ரூ.90க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. மூடப்பட்டுள்ள சூளைகளில் இரண்டு சூளைகளாவது மீண்டும் உடனடியாக திறக்கப்பட்டால் மட்டுமே பல்லடத்தில் சுண்ணாம்பு தட்டுப்பாடு நீங்கும்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports