நாட்டுக்கோழியை பண்ணையில் வளர்த்தால் அதிக எடையுடன் லாபம்

மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை விட பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் சமச்சீர் உணவுடன் மூன்று மாதத்தில் நல்ல எடையை தருகிறது,'' என, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 106 முட்டை கோழி பண்ணைகளில் 41.38 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

1,197 கறிக்கோழி பண்ணைகளில் 63.9 லட்சம் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பெருந்துறை, ஈரோடு பகுதியில் முட்டை கோழி பண்ணைகளும், காங்கேயம், தாராபுரம், மூலனூர் பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகளும் அதிகளவில் உள்ளன. முன்பெல்லாம் கிராமபுறத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு அதிகமிருந்தது.

வீட்டுக்கு பத்து முதல் 15 கோழிகள் வளர்க்கப்பட்டன. இந்த கோழிகள் பெரும்பாலும் வேளாண் நிலத்தில் கிடக்கும் தானியங்கள், புழு, பூச்சிகளை உண்டு வாழ்ந்தன. ஆண்டுக்கு 60 முட்டைகள் வரை உற்பத்தி செய்தன. இப்போது பிராய்லர் கோழிகளைப் போல், நாட்டுக் கோழிகள் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 13க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி பண்ணைகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உள்ளன.

இங்குள்ள பண்ணைகளில் தாய்க்கோழி மூலம் மூட்டைகள் மற்றும் குஞ்சுகள் (சிட்ஸ்) உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டைக்காக வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு இரண்டு சதுர அடியிடம் போதுமானது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிக்கு ஒரு சதுரஅடி இடம் போதுமானது. பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி இறைச்சியில் சுவை அதிகம். நாட்டுக்கோழிக்கு தீவனச் செலவும் குறைவுதான். நாட்டுக்கோழிகள் "வெள்ளை கழிச்சல்' நோயால் மட்டுமே அதிகம் பாதிக்கப்படும். அவற்றை தடுக்க மாவட்ட கால்நடை மருத்துவமனையில் பிரதிவாரம் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் டாக்டர் தனசீலன் கூறியதாவது: நாட்டுக்கோழிகளை இருமுறையில் வளர்க்கலாம். ஒன்று தரையில் உமி போட்டு வளர்க்கலாம். மற்றொன்று கூண்டுக்குள் வளர்க்கலாம்.

நாட்டுக்கோழிக்கு சாதாரணமாக சமச்சீர் உணவு கொடுத்து வளர்த்தால் ஐந்து மாதத்தில் 1.300 கிலோ முதல் 1.400 கிலோ வரை எடை கிடைக்கும்.
உணவு தேட ஒரு கோழி நாள் முழுக்க காடு, மேடு என அலைந்து திரிந்து தனது சக்தியை விரயம் செய்ய வேண்டி வரும். ஆனால், பண்ணையில் வளர்க்கும் நாட்டுக் கோழிகள் அப்படியல்ல; தேவையான அளவு சமச்சீர் உணவு கொடுத்து பராமரித்தால் மூன்று மாதத்தில் அதே எடைக்கு வந்து விடும். நல்ல விலையும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Admin

1 கருத்துகள்

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports