திமுகவின் வெற்றிக்கு துணை போகிறார் விஜயகாந்த்: பாஜக குற்றச்சாட்டு

தனி அணி அமைக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பதன் மூலம், திமுகவின் வெற்றிக்கு அவர் துணை போவதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

தேமுதிக தலைமையில் தனி அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

திமுகவின் வெற்றிக்கு உதவி செய்யும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். ஆனால், அதனையும் மீறி திமுக தோற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் திரைப்படத் துறையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் அனைத்துத் துறைகளும் அவர்களின் கட்டுக்குள் வந்து விடும். எந்தத் தொழிலதிபரும் தமிழகத்தில் தொழில் செய்ய முடியாது. எனவே, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக அனைத்துக் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து அணி திரள வேண்டும்.

கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் எந்தக் கட்சியுடனும் பேசவில்லை. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குள் நுழைவோம். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

கச்சத்தீவு ஒப்பந்த விவகாரம்: கச்சத் தீவு ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என்று மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

கச்சத் தீவை மீட்காவிட்டால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, கச்சத் தீவை மீட்க அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

6 மாநிலங்களில் 22 சேமிப்புக் கிடங்குகளில் பாஜகவினர் நடத்திய சோதனையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள் வீணாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 11,700 டன் அரிசியும், கோதுமையும் வீணாகியிருப்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. வீணாகும் உணவுப் பொருள்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports