நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நவம்பர் 9ல் ஒபாமா பேசுகிறார்


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், நவம்பர் எட்டாம் தேதி துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது; 9ம் தேதி, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்று வார் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், இரண்டு முறை அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கு வருகை தரும்படி அப்போது அழைப்பு விடுத்திருந்தார்.
‘நான் இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்’ என்று ஒபாமா மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அவர் வருகையால், இந்திய & அமெரிக்க உறவு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்றுடன் முடிந்தது. இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, பல்வேறு பிரச்னைகளால் எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் அலுவல்கள் பாதிக்கப்பட்டதற்கு மக்களவை சபாநாயகர் மீரா குமாரும், மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரியும் கவலை தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் கடந்த ஒரு மாதத்தில் 26 அமர்வுகள் நடைபெற்றன. இதில், 120 மணி நேர அலுவல் நடைபெற்றது. மக்களவையில் 45 மணி நேர அலுவல் பாதித்தது. இந்த கூட்டத் தொடரில் அணு உலை விபத்து இழப்பீடு மசோதா, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் திருத்த மசோதா, எம்.பி.க்களின் சம்பள உயர்வு மசோதா உட்பட 24 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கல்வி தீர்ப்பாய மசோதாவுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. விலைவாசி உயர்வு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி காமன்வெல்த் போட்டி ஏற்பாடு செலவுக்கு பயன்படுத்தப்பட்டது,

நக்சலைட்களுக்கு ஆதரவாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பேசியது, கர்நாடகாவில் நடைபெறும் சட்ட விரோத சுரங்கத் தொழில் போன்ற விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டன. கூட்டத் தொடர் முடிந்த பிறகு, நாடாளுமன்ற விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு மத்திய நிதி அமைச்சரும், அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், வீரப்ப மொய்லி, சிதம்பரம், பவன் குமார் பன்சல், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான அலுவல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத் தொடர் நவம்பர் 8ம் தேதி தொடங்கும். மறுநாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்றுவார் என்று தெரிகிறது. டிசம்பர் 10ம் தேதி வரை நாடாளு மன்ற கூட்டம் நடை பெறும். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஒபாமா முதல்முறையாக நவம்பரில் தான் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வருகிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவர் உரையாற்றுவதின் மூலம், இந்தியா & அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு மேம்படும் என்றும், கம்ப்யூட்டர் துறையில் அமெரிக்கா இப்போது நிறுத்தி வைத்துள்ள ‘அவுட் &சோர்சிங்’ பணிகள் இந்தியாவுக்கு மீண்டும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports