மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி அழியும் அபாயம் : மூட்டைக்கு ரூ.750 வழங்க விவசாயிகள் கோரிக்கை

விலை வீழ்ச்சி, மாவுப்பூச்சி தாக்குதல் போன்றவற்றால் மரவள்ளி கிழங்கு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூட்டைக்கு 750 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விபரம்: தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது.

கல்வராயன்மலை, பச்சமலை, கொல்லிமலை உள்ளிட்ட மலைகளில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இதேவேளையில் மூட்டைக்கு 750 ரூபாய் வரை கிடைத்தது. அதேபோல் ஸ்டார்ச் மூட்டை 3,000 ரூபாய், ஜவ்வரிசி மூட்டை 5,000 ரூபாய் என விலை கிடைத்து வந்தது.

தாய்லாந்தில் இருந்து மூன்று லட்சம் மூட்டை ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கள்ளிபூச்சி நோய் தாக்குதலால் அங்கு மரவள்ளி உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் விலை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், மரவள்ளி விலையோ மூட்டைக்கு 350 ரூபாய் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்டார்ச் மூட்டைக்கு 2,000 ரூபாய், ஜவ்வரிசி மூட்டைக்கு 3,000 ரூபாய் என குறைந்துள்ளது.

ஒரு பக்கம் மரவள்ளி மகசூல் குறைவு, இன்னொரு பக்கம் மழை இல்லாதது, புரோக்கர்களின் தில்லு முல்லு, பாய்ன்ட் பார்ப்பதிலும், எடை போடுவதிலும் மோசடி நடக்கிறது. அதையும் தாண்டிவந்தால் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசிக்கு விலையில்லை என மரவள்ளி கொள்முதல் தடுக்கப்படுகிறது.

சிறு, குறு, நடுத்தர ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்களை கேட்டால், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஜவ்வரிசி, ஸ்டார்ச் விலையை குறைத்து வருகிறார்கள் என்கின்றனர்.

மாவுப்பூச்சி நோய் பரவி வருவதால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர். விலை பிரச்னை ஒருபுறம், நோய் தாக்குதல் மறுபுறம் என்றிருந்தால் விவசாயிகள், ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர். மரவள்ளி விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைப்பகுதி கிழங்குகள் 90 சதவீதம் அறுவடையாகியும், தரைபகுதி கிழங்குகள் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு வர உள்ளது. சென்ற ஆண்டு கிடைத்த விலைக்கு குறையாமல் அதாவது மூட்டைக்கு 750 ரூபாய்க்கு குறையாமல் கொள்முதல் விலை கிடைக்க வேண்டும்.

ஆண்டுதோறும் மத்திய அரசு மரவள்ளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பரவி வரும் மாவுப்பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். இடைத்தரகர்களின் கொள்ளையை தடுக்க வேண்டும். அரசு சார்பாக வாகன ஏற்பாடு, பாயின்ட் மிஷின் மற்றும் எடைமேடை அமைத்து தர வேண்டும். சேலம் சேகோசர்வ் மூலம் மட்டுமே ஜவ்வரிசி விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும். ஆலை அதிபர்கள், வியாபாரிகள் வரி செலுத்தாமல் செய்யும் ஜவ்வரிசி வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports