மதுரை: 58 கிராமக் கால்வாய் திட்டம் செயலுக்கு வருவது எப்போது?

உசிலம்பட்டியில் 58 கிராமங்களுக்கு பாசனம் வழங்கும் வகையில் துவக்கப்பட்ட 58 கிராம கால்வாய் திட்டம், தொய்வான பணிகளால், நிறைவடையாமல் உள்ளது. உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில், வைகை அணையில் இருந்து 33 கண்மாய்களுக்கு பாசன வசதி செய்யும் வகையில் 58 கிராம கால்வாய் திட்டம் துவக்கப்பட்டது.


வைகை அணையில் இருந்து 22 கிலோ மீட்டர் பிரதான கால்வாயும், இடது, வலதுபுறக் கிளைக்கால்வாய்கள் என பிரிந்து 33 கண்மாய்களுக்கும் பாசனம் கிடைக்கும் வசதி ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். மொத்த பணிகளில் 70 முதல் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பிரதான கால்வாயில் குன்னத்துப்பட்டி, மேல அச்சணம்பட்டி பகுதிகளில் தொட்டிப்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. மதுரை - தேனி ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையிலும் , மதுரை - போடி ரயில்வே பாதையிலும் பாலங்கள் அமைக்கும் பணி இன்னும் துவக்கப்படவில்லை. 2008ல் இருந்து இந்த ஆண்டு செப்டம்பரில் முடிந்துவிடும் என ஒவ்வொரு ஆண்டும், அதிகாரிகள் இந்த பணி நிறைவடையும் நாள் குறிக்கின்றனர். 2010 செப்டம்பர் வந்தும் பணிகள் நிறைவடையவில்லை. அடிக்கல் நாட்டி பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டபோதும் இந்நிலை நீடிக்கிறது. ஆசியாவின் நீளமான தொட்டிப்பாலம்: பிரதான கால்வாயில் மேலஅச்சணம்பட்டி மற்றும் குன்னத்துப்பட்டியில் தண்ணீர் வருவதற்காக தொட்டிப்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

குன்னத்துப்பட்டி அருகே 1.2 கி.மீ., தூரமும், மேலஅச்சணம்பட்டியில் 1.4 கி.மீ., தூரத்திற்கும் தொட்டிப்பாலங்கள் அமைகின்றன. இதில் மேல அச்சணம்பட்டியில் அமையும் பாலம் அதிகபட்ச உயரமாக 18.54 மீட்டரும், குறைந்த பட்சம் 8 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைகிறது. இதற்காக 230 தூண்கள் எழுப்பப்பட்டு மேல்பகுதியில் 2.1 மீட்டர் உயரம், 2.5மீட்டர் அகலம் கொண்ட தொட்டி அமைக்கப்படுகிறது. தொட்டிப்பாலத்தின் வழியாக வினாடிக்கு 330 கனஅடி நீர் செல்லும். இந்த பாலம் முழுமை பெறும்போது ஆசியாவில் நீளமான தொட்டிப்பாலமாக அமையும்.


இயற்கையும் ஒத்துழைக்கவில்லை: மலையடிவாரத்தில் அமையும் இந்த தொட்டிப்பாலம் கட்டப்படும் இடத்தில், பலமான காற்று வீசுவதால் பணியாட்கள், நீண்ட நேரம் பணியில் ஈடுபட முடியவில்லை. இதையும் மீறி கட்டுமான பணியாளர்கள் காலையில் மட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். பகல் ஒரு மணிக்கு மேல் காற்றின் வேகம் அதிகரிப்பதால் பிற்பகலில் பணி செய்ய முடியவில்லை. இதனாலும் தொட்டிப்பாலம் அமைக்கும் பணியில் தாமதம் உண்டாகிறது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports