5 நாள்களுக்குள் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும்: எடியூரப்பா


காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் கர்நாடக முதல்வர் பி. எஸ். எடியூரப்பா.


கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருவதால், அடுத்த 5 நாள்களுக்குள் காவிரியில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறினார்.

தமிழகத்தில் உள்ள நவக்கிரக தலங்களில் வழிபாடு நடத்துவதற்காக பெங்களூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சனிக்கிழமை வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பல்வேறு கோயில்களுக்கும் சென்றுவிட்டு கார் மூலம் பிற்பகல் 1.45 மணிக்கு காரைக்கால் வந்தார்.

அங்கிருந்து திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு சென்ற அவரை, கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் சால்வை, மாலை அணிவித்து வரவேற்றார்.

கோயில் மூலவரான தர்பாரண்யேசுவரர், பிரணாம்பிகை அம்பாள் சன்னதிகளில் வழிபாடு நடத்திய எடியூரப்பா, தனி சன்னதிகொண்டு அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசித்தார். சுவாமிக்கு கறுப்பு வஸ்திரம் அணிவித்து, ஏராளமான பழங்களுடன் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். சன்னதியில் எள் தீபம் ஏற்றினார். எடியூரப்பாவுக்கு கோயில் சிவாச்சாரியர்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து சன்னதிக்கு வெளியே வந்த முதல்வர், சனீஸ்வரனுக்கு உரிய வாகனமான காகத்துக்கு உணவளிக்கும் வகையில், எள் சாதத்தை காகங்களுக்கு வழங்கினார்.

கோயில் அலுவலகத்துக்குள் சென்ற எடியூரப்பாவிடம், கோயில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம் விளக்கினார். அப்போது, அருள்மிகு தர்பாரண்யேசுவரருக்குரிய ரிஷப வாகனம் சிதிலமடைந்திருப்பதால், தங்கத்தாலான ரிஷப வாகனம் செய்யத் தேவையான ரூ.40 லட்சத்தை தருவதாக எடியூரப்பா உறுதி அளித்தார்.

கோயிலுக்கு வெளியே வந்த எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியது:

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே, அடுத்த 4 அல்லது 5 நாள்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும். இதுகுறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் ஒரு பிரச்னையாக இருக்காது என்றார்.

தினமணி
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports