வீணாகும் 25 லட்சம் டன் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க முடிவு

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் நிலையில் உள்ள உணவு தானியத்தில் இருந்து 25 லட்சம் டன்னை ஏழைகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், நீதிமன்றம் கூறியபடி இலவசமாக வழங்குவதற்கு பதிலாக, ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்கப்பட உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகளில் சரியான பராமரிப்பின்றி லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் பாழானது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உணவு தானியங்கள் கெட்டு வீணாவதை விட, பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்கள்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், ‘உச்ச நீதிமன்றம் சொன்னது யோசனைதான்; உத்தரவு அல்ல. உணவு தானியங்களை இலவசமாக வழங்க இயலாது’’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் கூறினார். இந்த பதிலால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர், ‘வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும்படி உத்தரவுதான் பிறப்பித்தோம்; அதை யோசனையாக சொல்லவில்லை’’ என்று கோபமாக கூறினர்.

இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. இதில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு குறைந்த விலைக்கு 25 லட்சம் டன் கோதுமை, அரிசியை வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, எல்லா மாநிலங்களுக்கும் கூடுதலாக கோதுமை, அரிசி ஒதுக்கப்பட உள்ளது.

நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி கிலோ ^5.65, கோதுமை ^4.15க்கு வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், 6.52 கோடி குடும்பங்கள் பயன் பெறுகின்றன. மத்திய அரசின் இந்த முடிவால் இவர்கள் பயன் பெறுவார்கள்.

இது குறித்து அமைச்சர்கள் கூட்டத்துக்கு பிறகு சரத் பவார் அளித்த பேட்டியில், ‘‘நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் கூடுதலாக 25 லட்சம் டன் கோதுமை மற்றும் அரிசி ஆகியவை குறைந்த விலைக்கு ஒதுக்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அவை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். கூடுதலாக கோதுமை, அரிசி அடுத்த 6 மாதங்களுக்கு மாநிலங்களுக்கு குறைந்த விலைக்கு ஒதுக்கப்படும்’’ என்றார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports