கத்தரி செடியில் வெட்கை நோய் பாதிப்பு: விவசாயிகள் கவலை

விருதுநகர்: கத்தரிக்காய் செடியில் வெட்கை நோய் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். காரியாபட்டி பகுதியில் வரலொட்டி, கெப்பிலிங்கம்பட்டி, சூரம்பட்டி உட்பட பல கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கத்தரிக்காய் பயிரிட்டுள்ளனர். மழை பெய்ய தவறியதையடுத்து கிணற்று பாசனம் செய்து செடிகளை வளர்த்தனர். பருவத்திற்கு வந்து பலன் கொடுக்கும் நேரத்தில் வெட்கை நோய் தாக்கி காய்களில் புழு உண்டாகி கத்தரிக்காய்கள் சூத்தையாக மாறின. சூத்தை கத்தரிக்காய் பயன்பாட்டிற்கு உதவாததையடுத்து வீணாக சாலைகளில் கொட்டி வருகின்றனர். நோய் ஏற்பட்டவுடன் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தும் நோய் பரவுவதை தடுக்க முடியவில்லை. பறித்த கூலி கூட கிடைக்காமல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஜெயராம் கூறுகையில்:
ஒரு ஏக்கர் கத்தரிக்காய் சாகுபடி செய்ய 15 ஆயிரம் செலவாகிறது. கடந்த ஆண்டு நல்ல லாபம் கிடைத்தது. அதை நம்பி இந்தாண்டும் கத்தரிக்காய் பயிரிட்டோம். பலன் கொடுக்கும் நேரத்தில் வெட்கை நோய் தாக்கி காய்கள் அழுகியது. பறித்த கூலிகூட கிடைக்காமல் காய்களை ரோட்டில் கொட்டி வருகிறோம். ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என கவலை தெரிவித்தார். உரிய நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தும் பயன் இல்லை. விவசாய அலுவலர்களிடம் தெரிவித்தும் ஆலோசனை வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து விவசாய அலுவலரிடம் கேட்டபோது: மழை இல்லாமல், வெயில் அதிகமாக அடிப்பதால் செடியில் வெட்கை நோய் தாக்கி இருக்கும். உரிய முறையில் மருந்து தெளித்திருந்தால் காய்களில் புழு தாக்கியிருக்காது. இலைகள் அடர்த்தியாக இருக்கும் பட்சத்தில் அந்த இலைகளை பறித்துவிட்டால் புழுதாக்குவதிலிருந்து பாதுகாக்கலாம் என்றார்

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports