விவசாய தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை மிக குறைவு : வாரிய தலைவர் அதிருப்திவிருதுநகர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை குறைவாக உள்ளதாக வாரிய தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார். சிறப்பு முகாம்கள் நடத்தி உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாய தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், ஆய்வு கூட்டமும் நடந்தது. வாரிய தலைவர் கே.பி. ராமலிங்கம் பேசியதாவது: நல வாரியம் துவக்கப்பட்டு தமிழகத்தில் இன்று வரை 75 லட்சத்து 73 ஆயிரத்து 643 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 73 லட்சத்து 761 உறுப்பினர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். திருமணம், முதியோர், விபத்துமரணம், மகப்பேறு, கல்வி, ஈமச்சடங்கு ஆகிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. 5 லட்சத்து 10 ஆயிரத்து 504 பயனாளிகளுக்கு, 416 கோடியே 45 லட்சத்து 81 ஆயிரத்து 85 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 635 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் நல திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அரசு கடந்த ஆண்டு நல வாரியத்திற்கு 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்தாண்டு உயர்த்தி 152 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: பரப்பளவில் மிக சிறிய மாவட்டமான விழுப்புரத்தில் 9 லட்சம் பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். முழுக்க விவசாயம் நிறைந்த விருதுநகர் மாவட்டத்தில் குறைவான 2 லட்சத்து 21 ஆயிரத்து 45 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது வரை 4 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 40 கோடி ரூபாய் கேட்டால் கூட தர தயாராக இருப்பதாக வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் நல வாரிய உறுப்பினர் சேர்க்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், 'விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் உறுப்பினர் குறைவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.' என்றார்.கூட்டத்தில் இணை தலைவர் செல்லமுத்து, கலெக்டர் சிஜி தாமஸ், டி.ஆர்.ஓ., கணேசன் கலந்து கொண்டனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports