ஆள் பற்றாக்குறையை போக்க அகன்ற பாரில் நடவு செய்யுங்கள் :கரும்பு விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள்ஆள் பற்றாக்குறையை போக்க அகன்ற பாரில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு கோட்ட கரும்பு அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறையை சமாளித்து இயந்திரத்தை பயன்படுத்தி கரும்பை அகல பாரில் நடவு செய்வதால் கிடைக்கும் கூடுதல் பலன்கள் பற்றி செயல் விளக்கம் செய்து காண்பிக்க கூட்டுறவு சர்க்கரை அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மேற்கு கோட்டம் மோகன் என்பவரின் நிலத்தில் அகல பார் மூலம் கரும்பு நடவு என்ற தலைப்பில் செயல் விளக்கமும் வயல் விழாவும் நடந்தது.

வயல் விழாவில் ஆலையின் கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெங்கடசாமி தலைமை வகித்து, அனைத்து சாகுபடி முறைகளையும் கடைபிடித்து கரும்பில் அதிக மகசூல் எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கோட்ட கரும்பு அலுவலர் வெற்றிவேந்தன் பேசியதாவது:

விவசாயத்திற்கு பெரும் தடைக்கற்களாக இருப்பது விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை. கரும்பு சாகுபடிக்கு தேவைப்படும் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்திட அகலப்பார் மூலம் கரும்பு நடவு செய்திட வேண்டும். இதற்காக 4 அடி அகலப்பார் அமைத்து கரும்பு நடவு செய்ய வேண்டும். அகலபாரில் நடவு செய்யும்போது பவர் டில்லர் மூலம் களை எடுப்பது மண் அணைப்பது போன்றவற்றை செய்து சாகுபடி செலவினங்களை குறைக்கலாம்.

அகலப்பாரில் கரும்பு நடவு செய்வதால் விதைக்கரும்பின் தேவையில் 40 சதவீதம் குறைக்கலாம். அகலப்பார் கரும்பு நடவில் உளுந்து, காராமணி, சோயா மொச்சை போன்றவற்றை ஊடுபயிராக பயிர் செய்து கூடுதல் லாபம் பெறலாம். மற்றும் 7ம் மாதங்களில் சோகை உரிப்பதும் 7மற்றும் 9ம் மாதங்களில் விட்டம் கட்டுவதும் எளிதாகும். சூரிய ஒளியும், காற்றோட்டமும் அகலப்பார் நடவில் அதிக அளவில் கிடைக்கின்ற காரணத்தால் தனிக் கரும்பின் எடை அதிகரித்து அதிக மகசூல் கிடைக்கிறது.

நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும் அகலப்பார் நடவில் எளிதாகும்.அகலப்பாரில் கரும்பு நடவு செய்வதால் அறுவடை இயந்திரன் மூலம் அறுவடை செய்யமுடியும், இதனால் தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யப்படுவதோடு சாகுபடி செலவினமும் குறைந்து விவசாய அங்கத்தினர்கள் கூடுதல் லாபம் பெறமுடியும். அதிக எண்ணிக்கையில் மறுதாம்பு விடலாம். இவ்வாறு கோட்ட கரும்பு அலுவலர் வெற்றிவேந்தன் பேசினார்.

கரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில் நுட்ப கருத்துகளை காக்கங்கரை பிரிவு கரும்பு உதவியாளர் குமார் எடுத்துக்கூறினார். கரும்பில் விதை நேர்த்தி செய்வது பற்றிய செயல் விளக்கத்தினை மேற்கு வட்ட கரும்பு பெருக்கு உதவியாளர் சந்திரபோஸ் செய்து காட்டினார். உதவியாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் வெங்களாபுரம் அனேரி, பால்னாங்குப்பம், கவுண்டப்பனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports