பல்லடம் பகுதியில் பால் உற்பத்தி 20 சதவீதம் சரிந்தது.

பசுந்தீவனங்கள் விளைச்சல் பாதிப்பு, வெயில் தாக்கம் காரணமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பால் உற்பத்தி 20 சதவீதம் சரிந்தது.

பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 8,000க்கும் மேற்பட்ட கலப்பின உயர் ரக கறவை மாடுகள் வளர்க்கப்பட்டு, பால் உற்பத்தி நடந்து வருகிறது. சிந்து, ஜெர்ஸி இன ரக மாடுகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. குறைந்த அளவு பால் தரும் நாட்டு ரக கறவை மாடுகள் 1,000க்கும் குறைவாகவே உள்ளன. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பால்கள் தனியார் கொள்முதல் நிலையம், ஆவின் கொள்முதல் நிலையம், ஓட்டல் மற்றும் வீடுகளுக்கு விவசாயிகளால் விற்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலை, பாக்கெட்களில் அடைத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அனுப்புகின்றன. இரண்டு வாரங்களாக, பல்லடம் பகுதியில் அடிக்கும் கடும் வெயில் காரணமாக பசுந்தீவனங்கள் உற்பத்தி குறைந்து விட்டது. கறவை மாடுகளுக்கு பசுந்தீவனங்கள் போதிய அளவு கிடைக்காமை; கடும் வெயில் தாக்கம் காரணமாக, பல்லடம் பகுதியில் பால் உற்பத்தி வழக்கத்தை விட, 20 சதவீதம் சில நாட்களாக சரிந்துள்ளன. இரண்டு வாரத்திற்கு முன் தினமும் 10 லிட்டர் பால் கொடுத்த கறவை மாடுகள், எட்டு லிட்டர் மட்டுமே பால் கொடுக்கின்றன.தற்போது, பால் லிட்டருக்கு 14 முதல் 15 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் விலை கிடைத்து வரும் நிலையில், ஒவ்வொரு மாட்டுக்கும் சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை பால் உற்பத்தி குறைவு இத்தொழிலை முழுமையாக நம்பியுள்ள விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தி குறைவு, மாட்டுத்தீவனங்கள் விலை உயர்வு காரணமாக சொந்தமாக தீவனம் வளர்க்க, விவசாய பூமிகள் இல்லாத விவசாயிகள், கறவை மாடு வளர்ப்புத் தொழிலில் போதிய வருவாயின்றி அவதி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சித்தம்பலம் விவசாயி மணி கூறியதாவது:பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரங்களில் கடந்த இரண்டு வாரங்களாக அடித்து வரும் கடும் வெயில் காரணமாக பசுந்தீவனங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தி, கடந்த ஒரு மாதத்தை ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைந்துள்ளது. பல்லடம் பகுதியில் தற்போது மேய்ச்சல் நிலங்கள் பெருமளவு வீட்டுமனைகளாக மாறிவருவதால், வருங்காலங்களில் பசுந்தீவனம் விளைச்சல் அரிதாகி விடும். தற்போது தினமும் 10 லிட்டர் பால் கொடுக்கும் கறவை மாடுகளுக்கு தீவனச்செலவு 70 முதல் 80 ரூபாய் வரை ஏற்படுகிறது. பருத்திக்கொட்டை கிலோ 11 ரூபாயாகவும், புண்ணாக்கு 15 ரூபாயாக உள்ளதால், பால் உற்பத்தியில் எதிர்பார்க்கும் அளவு லாபம் கிடைப்பதில்லை. பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தினால் மட்டுமே பால் உற்பத்தியாளர்கள் பயனடைய முடியும், என்றார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports