கர்னாடகா பொன்னி ரக நெல் மூடைகள் விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம்


கர்னாடகா பொன்னி ரக நெல்மூடை விலை குறைவால், கூட்டுறவு கடன் சங்கங்களில் நெல் மூடைகளை அடமானம் வைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிவகாசி தாலுகாவில் புதுக் கோட்டை, சித்தமநாயக்கன்பட்டி, ஈஞ்சாறு, நடுவபட்டி, வடபட்டி, நாரணாபுரம், திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி உட்பட்ட கிராமங்களில் 700 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இப் பகுதியில் ஜே.எல்.1789 என்ற சன்னரக நெல்லான கர்னாடகா பொன்னி 70 சதவீத அளவில் சாகுபடி செய்தனர். இதன் சாகுபடி காலம் 120 நாட்கள். இது தவிர 90 நாட்களில் பலன் தரக்கூடிய ஆடுதுறை 45 ரக நெல்லும் சாகுபடி செய்துள்ளனர்.
இப்பகுதியில் 15 நாட்களாக நெல் அறுவடை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 73 கிலோ எடையிலான கர்னாடகா பொன்னி நெல் மூடை 1200 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கினர். இந்த ஆண்டு மூடை 800 முதல் 850 ரூபாய்க்கு வாங்குகின்றனர். மூடைக்கு 400 ரூபாய் குறைவாக வாங்குகின்றனர்.
கடந்த ஆண்டு மழை போதுமான அளவில் இருந்ததால் ஏக்கருக்கு 9 ஆயிரம் கிலோ மகசூல் கிடைத்தது. இந்த ஆண்டு மழை பொழிவு குறைவாக இருந்ததால் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிலோ வரைதான் மகசூல் கிடைத்துள்ளது.
கர்னாடகா பொன்னிக்கு இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு விலை குறைவு, மகசூல் குறைவு போன்றவற்றால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் குறைந்த நாட்கள் பயிரிட்டு மகசூல் தரும் ஆடுதுரை 45 ரக நெல் விலை குறைவு இன்றி மூடை 800 ரூபாய்க்கு வியாபாரிகள் பெறுகின்றனர்.
அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததால் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் நடைமுறை அதிகரித் துள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஒரு மணிநேரத்திற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற்ற அறுவடை இயந்திர வாகனங்கள் இந்த ஆண்டு 1200 ரூபாய்கு வசூலிக்கின்றனர்.
கர்னாடகா பொன்னிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பலர் நெல் மூடைகளை கூட்டுறவு அடமான சங்கங்களில் அடமானம் வைத்து மூட்டைக்கு 600 ரூபாய் பெறுகின்றனர். அதிகரிக்கும் போது மூடைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.பொன்னி நெல் மூடை விலை உயரவில்லை. ஆனால் பொன்னி அரிசி கிலோ ரூ.35க்கு குறையவில்லை.
சிவகாசி வட்டார விவசாயிகள் சங்க தலைவர் திருவேங்கட ராமானுஜம் கூறுகையில், வியாபாரிகளும், மில் உரிமையாளர்களும் கூட்டணி அமைத்து கர்னாடகா பொன்னிக்கு நெல் விலையை உயர்த்த விடாமல் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். எனவே அரசு மூடைக்கு 900 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் நெல் மூடைக்கு தரும் தொகையினையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports