ஒட்டன்சத்திரம் பகுதியில் உற்பத்தி அதிகரிப்பால் ​ புகையிலை விலை வீழ்ச்சி:​ விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம்,​​ ஒட்டன்சத்திரம் பகுதிகளில் புகையிலை உற்பத்தி அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.​ இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.​ ​ ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள குள்ளவீரன்பட்டி,​​ அம்பிளிக்கை,​​ சிந்தலைப்பட்டி,​​ ஒடைப்பட்டி,​​ குத்திலுப்பை,​​ ஜ.வாடிப்பட்டி,​​ கே.கீரனூர்,​​ சீரங்கவுண்டன்புதூர்,​​ தங்கச்சியம்மாபட்டி,​​ வெரியப்பூர்,​​ ஜவ்வாதுபட்டி,​​ சின்னக்காம்பட்டி,​​ மார்க்கம்பட்டி,​​ இடையகோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் புகையிலை பயிரிட்டுள்ளனர்.​ இதனால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.​ ​ புகையிலையை விவசாயம் செய்த இடத்திற்கே வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.​ கடந்த ஆண்டு ஒரு பச்சைச் செடியை ​(கட்டை)​ வியாபாரிகள் 7 முதல் 8 ரூபாய்க்கு வாங்கினார்கள்.​ ​ ஆனால் இந்த ஆண்டு ஒரு புகையிலைச் செடியை ரூ.2.50 முதல் 4 வரை கொள்முதல் செய்கின்றனர்.​ உற்பத்திச் செலவிற்குக்கூட விற்க முடியவில்லை என்று சில விவசாயிகள் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.​ ​ இது குறித்து அம்பிளிக்கையைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:​ ​ வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆயிரம் புகையிலை நாத்து ரூ.300 விலை கொடுத்து வாங்கி வந்து அதை நடவு செய்தேன்.​ நன்கு பராமரித்து உரம்,​​ மருந்து அடித்து நல்ல முறையில் விளைச்சல் அடைய அரும்பாடுபட்டோம்.​ ​ கடந்த ஆண்டு நல்ல விலை இருந்ததால் நானும் புகையிலை விவசாயம் செய்தேன்.​ ஆனால் வியாபாரிகள் கூட்டாகச் சேர்ந்து உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவாகத் தான் வாங்குவோம் என்று கூறி ஒரு புகையிலைச் செடியை ரூ.2.50 முதல் 4 வரை தான் கொள்முதல் செய்கின்றனர்.​ ​ இதனால் எங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.​ இரவு,​​ பகலாகத் தண்ணீர் பாய்ச்சி,​​ வேலைக்கு ஆள்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம்.​ நல்ல விலை கிடைத்து இருந்தால் கூட எங்களுடைய கவலை எல்லாம் மறந்து போய் இருக்கும்.​ எங்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்குமா?​ என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports