அவுரி விதைக்கு மத்திய அரசு நூறு சதவீதம் மானியம் : தோட்டக்கலைதுறை தகவல்

விதைகள் சேகரிக்க உயர் ரக அவுரி விதைகளை மத்திய அரசு நூறு சதவீத மானிய விலையில் வழங்க உள்ளதாக தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மூலிகை நறுமண பயிர்கள் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணைந்து புளியம்பட்டியில் மூலிகை மற்றும் நறுமண பயிர்கள் விழிப்புணர்வு முகாம் நடத்தியது. ஒன்றிய துணைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கனகராஜ் வரவேற்றுப் பேசினார்.ஐதராபாத் மத்திய மூலிகை மற்றும் நறுமண பயிர்கள் மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் கலந்து கொண்டு அவுரி, நித்திய கல்யாணி, கண்வலிக்கிழங்கு போன்ற மூலிகை பயிர்கள் பாம்ரோஸ் போன்ற நறுமணப் பொருட்கள் சாகுபடி தொழில் நுட்பம், பொருட்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்வது குறித்து விரிவாக பேசினர்.விதைகள் சேகரிக்க உயர்ரக அவுரி விதைகளை மத்திய அரசு நூறு சதவீத மானியத்தில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மூலிகை பயிர் சாகுபடி செய்வதால் உள்ள நன்மைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜோசப்கருணாநிதி, ஐடிஐ நிர்வாகி கணபதி, உதவி இயக்குநர் ஆல்பிரட், பழனிவேலாயுதம் ஆகியோர் பேசினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அவுரி, நித்திய கல்யாணி பயிர் சாகுபடி செய்பவர்களுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரம் மானியமும், அதிகப்பட்சமாக ஒரு விவசாயிக்கு 4 ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மானியம் பெற விரும்புபவர்கள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்து பத்து ஒன்று, அடங்கல் நகல்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports