மரவள்ளி பயிருக்கு காப்பீடு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் மரவள்ளி பயிருக்கு மார்ச் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ளதாவது: மத்திய அரசு நிறுவனமான இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனம் மூலம் தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் மூலம் அனைத்து விதமான உணவுப்பயிர் மற்றும் வருடாந்திர வணிக தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு செய்யப்படுகிறது. அனைத்து விதமான இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு இத்திட்டம் காப்பீடு வழங்குகிறது.

தேர்வு செய்யப்பட்டு அறிக்கை செய்யப்பட்ட குறுவட்டம் அல்லது தாலுகாவை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது கூட்டுறவு வங்கிகளிலோ கடனுதவி பெற்ற விவசாயிகள் தாங்கள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப பயிர்காப்பீடு செய்யலாம். குத்தகைதாரர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, இடிமின்னல்,இயற்கை தீ போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்து சராசரி மகசூல் 150 சதவீதம் மதிப்பு வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட பருவத்துக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தாந்தோணி வட்டாரத்தில் 2009-10ம் ஆண்டு ராபி பருவத்தில் வெள்ளியணை குறுவட்டத்தைச்சேர்ந்த மரவள்ளி பயிர் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். திட்டத்தின் கீழ் கடந்த 2009 அக்டோபர் முதல் தேதி முதல் வரும் 28ம் தேதி முடிய மரவள்ளி சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தாங்கள் காப்பீடு செய்ய விரும்பும் தொகையில் 4.45 சதவீதம் தொகையை காப்பீடு கட்டணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் பயிர்காப்பீட்டுத் கட்டணத்தை செலுத்த முன்வரும் விவசாயிகளுக்கு மாநில அரசால் காப்பீட்டுக் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பதிவு செய்து மரவள்ளி பயிரினை காப்பீடு செய்து கொள்ள விரும்பும் வெள்ளியனை குறுவட்ட விவசாயிகள் வரும் மார்ச் 30ம் தேதிக்குள் பயிர்காப்பீட்டு கட்டணத்தை மானிய உதவியுடன் கட்டி பயிர்காப்பீடு செய்து பயனடையலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports