இயற்கை உரம் விற்பனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

""இயற்கை வேளாண்மையில், இயற்கை உரம் விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என ஈரோடு வேளாண் இணை இயக்குனர் கோபால் கூறினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் இயற்கை வேளாண்மை முறையை விவசாயிகள் அதிகம் பின்பற்றி வருகின்றனர். இயற்கை வேளாண்மை செய்யவும், அவற்றின் மூலம் தரமான உணவுப் பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலும் ஆர்வமாக உள்ளனர். இயற்கை வேளாண்மையில் ரசாயன உரம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, அங்கக ஈடுபொருட்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். முழுமையாக அங்கக வேளாண்மை பயன்படுத்தி வேளாண்மை சான்று பெறவும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் நோக்கம் நிறைவேறும் வகையில், தரமான அங்கக இடுபொருட்களை வாங்கி பயன்படுத்தவும், அதற்கான வழிவகை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எந்த வேளாண்மை அங்கக உரங்களும் கடைகளில் விற்பனை செய்யுபோது, தக்க சான்றிதழ் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் விற்பனையாகும் உரங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அங்கக உரங்கள் அரசு நிர்ணயித்துள்ள அளவுகளில் நுண்ணுயிர்கள், எண்ணிக்கை மற்றும் உரச்சத்துக்களின் அளவு இருக்க வேண்டும். அதற்கான நடைமுறையை மத்திய அரசு உரப்பாதுகாப்பு சட்டத்தின் மூலம் வழிவகை செய்துள்ளது. அங்கக உரங்களில் தரத்தை நிர்ணயம் செய்யும் வகையில், கடைகளில் விற்கப்படும் அங்கக இடுபொருட்கள் மாதிரி எடுக்கப்பட்டு, உரிய ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்படும். தரப்பரிசோதனை முடிவுகளின் படி தரமற்ற இடுபொருட்களின் மீது உரப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படும். விவசாயிகள் கடைகளில் இடுபொருட்களை வாங்கும் போது, தரமான இடுபொருட்களை வாங்க வேண்டும். வாங்கிய இடுபொருட்களுக்கு ரசீது பெற வேண்டும். தரமான அங்கக இடுபொருட்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports