அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ஈரோடு: நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்கவில்லை என்றால், பொங்கலன்று ஆர்ப்பாட்டம் நடக்கும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் துளசிமணி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசனப் பகுதியில் நன்செய் பாசனம் மூலம் ஒரு லட்சத்து 7,000 ஏக்கர் நிலங்களில் டிசம்பர் மாதம் கடைசி வாரத்திலேயே நெல் அறுவடை துவங்கி விட்டது. தற்போது தீவிரமாக நெல் அறுவடை நடந்து வருகிறது. எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனே துவங்க வேண்டும். தமிழக அரசு குவிண்டாலுக்கு 1,050 ரூபாய் விலை நிர்ணயத்துடன் ஊக்கத்தொகையாக 50 ரூபாய் சேர்த்து 1,100 ரூபாய் விலை அறிவித்துள்ளது. இத்தொகை விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை. எனவே, குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட வேண்டும். தற்போது நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளதால், வியாபாரிகள் திட்டமிட்டு வெளி மார்க்கெட்டில் நெல் விலையை குறைத்து, மிகக்குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இதனால், ஏற்கனவே சாகுபடி செலவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருத்த நஷ்டத்தையும், துயரத்தையும் அடைந்துள்ளனர்.தமிழக அரசு உடனடியாக பவானிசாகர் அணை பாசனப் பகுதியில் காஞ்சிகோவில், கவுந்தப்பாடி, நசியனூர், நல்லாம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, பவானி, சிவகிரி, மொடக்குறிச்சி, எழுமாத்தூர், முத்தூர், வெள்ளோடு, வெள்ளகோவில், காசிபாளையம், வெள்ளாங்கோவில், பொலவக்காளிபாளையம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காவிடில் வரும் 14ம் தேதி பொங்கல் அன்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports