பயிர்களுக்கு மானிய விலை டி.ஏ.பி., உரம் வேளாண் அதிகாரி தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயறு வகை பயிர்களுக்கு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் டி.ஏ.பி., உரங்கள் வழங்கப்படுகிறது. இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் ராஜன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66 ஆயிரத்து 900 ஹெக்டர் பரப்பில் ஆண்டு தோறும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.


நடப்பு பருவத்தில் மட்டும் இதுவரை 64 ஆயிரத்து 473 ஹெக்டர் பரப்பில் துவரை, உளுந்து, காராமணி, பச்சைபயறு, மொச்சை, கொள்ளு ஆகிய பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயறு வகை பயிர்களுக்கு இடையில் மானாவாரியாக நிலக்கடலை, ராகி, மா ஆகிய பயிர்கள் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக விவசாயிகள் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உயிர் உரம், உரங்கள் இடுவது போல மானாவாரி பயறு வகைகளுக்கு உரங்கள் உட்பட ஏதும் இடுவதில்லை. அதனால் மானாவாரி பயறு வகைகள் குறைவாகவே மகசூல் கொடுக்கிறது. அதை கருத்தில் கொண்டு பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்க டி.ஏ.பி., உரத்தை இலை வழியாக தெளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ஹெக்டேருக்கு 200 ரூபாய் மானியத்தில் டிஏபி உரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சம்பா நெல் அறுவடைக்கு பிறகு இறவை ராகி மற்றும் இறவை நிலக்கடலை சாகுபடி செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ஜனவரி -பிப்., மாதங்களில் இறவை நிலக்கடலை, ராகி பயிர்களுக்கு பதிலாக பயறு வகைகளான உளுந்து, காராமணி ஆகிய பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.
குறைந்த பட்சம் உயிர் உர நேர்த்தி, டி.ஏ.பி., தெளிப்பு ஆகிய தொழில் நுட்பங்களை பின்பற்றினால் 65 முதல் 70 நாட்களில் ஏக்கருக்கு 300 லிருந்து 400 கிலோ விதைகள் கிடைக்கப்பெற்று ஒரு ஏக்கரில் 17 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெறலாம். பயறு வகை பயிர்களுக்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் டிஏபி உரம் வழங்குவதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2 லட்சம் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை தெளிப்பதற்கு ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதம் இரண்டு முறை தெளிப்பதற்கு மொத்தம் 25 கிலோ டிஏபி வேளாண்மை துறை மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தந்த பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி மானிய விலையில் டி.ஏ.பி., உரம் பெற்று தக்க தருணத்தில் பயறு வகை பயிர்களுக்கு தெளித்து கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports