எல்லா விவசாயிகளுக்கும் 6% வட்டியில் பயிர் கடன்


புதுடெல்லி : நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் 6 சதவீத வட்டியில் பயிர் கடன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுபற்றிய அறிவிப்பு அடுத்த மாத பொது பட்ஜெட்டில் இடம்பெறுகிறது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சக உயரதிகாரி ஒருவர் நேற்று இதைத் தெரிவித்தார். விவசாயிகளுக்கு இப்போது 7 சதவீத வட்டியில் பயிர் கடன் அளிக்கப்பட்டு வருகிறது.
அசலையும், வட்டியையும் சரியாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகள் மீண்டும் கடன் பெறும்போது ஒரு சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு 6 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகள் பெறும் கடனுக்கு 7 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. இதை மாற்றி, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வட்டியில் 1 சதவீதத்தை குறைக்க நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
பயிர் கடன் வட்டியை மேலும் ஒரு சதவீதம் குறைப்பதால் அரசுக்கு நிதிச் சுமை ஏற்படும். அதை சமாளித்து இந்த திட்டத்தை அமல்படுத்தும் வழிகளை ஆராய்ந்து வருவதாக பெயர் வெளியிட விரும்பாத நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
ரூ.3 லட்சம் வரை பெறப்படும் குறுகிய கால பயிர் கடனுக்கு வட்டி மீது தொடர்ந்து மானியம் அளிக்கப்பட்டு 7 சதவீத வட்டி நீடிக்கும் என்று கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். கடந்த ஆண்டில் வட மாநிலங்களில் பருவ மழை குறைவாக பெய்ததால் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. எனினும், விவசாய வளர்ச்சியை குறைந்தது 4 சதவீதமாக்க அத்துறை மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றி பிரணாப் ஏற்கனவே வலியுறுத்தினார். இப்போது 1 சதவீத வட்டி குறைப்பு மூலம் விவசாய வளர்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports