ஜன., 21ல் மீண்டும் கள் இறக்கும் போராட்டம்: ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தகவல்

""கடந்த ஆண்டு ஜனவரி 21ல் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போதும் மறைமுகமாக கள் இறக்கி வருகிறோம். வரும் 21ம் தேதி இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.சேலத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கள் போதைப் பொருள் அல்ல. உணவின் ஒரு பகுதியாக அறிவிக்கலாம் என கள் இயக்கம் சார்பில் போராடி வருகிறோம். கடந்த ஆண்டு ஜனவரி 21ல் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போதும் மறைமுகமாக கள் இறக்கி வருகிறோம். வரும் 21ம் தேதி இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழுவின் காலம் முடிவடைந்து விட்டது. ஆனால், அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் தானியப் பொருட்களில் இருந்து மது வகைகளை தயாரிக்கின்றனர்.இந்தியாவில் ரசாயனக் கழிவுகளில் இருந்தே மது தயாரிக்கப்படுகிறது. கள்ளுக்கு அனுமதியளித்தால் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதை சந்தைப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். பனை ஓலையும், தமிழையும் பிரிக்க முடியாது. பனை ஓலை இல்லை என்றால் சங்க தமிழ் இலக்கியங்களே இல்லை. உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. மாநாட்டுக்கு முன் கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும். கள் இறக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து 19ம் தேதி கோவையில் அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கள்ளுக்கு உண்டான தடையை நீக்காவிட்டால் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports