20 மணி நேரம் மின்சாரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயத்திற்கு 20 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

​ திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 27-வது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.​ இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

​ தமிழ்நாட்டில் பாசன வசதி பெற்ற நிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிலம் மின் இணைப்பு மூலம் பாசனம் பெறுகின்றன.​ 2 ஆண்டுகளாக அமல்படுத்தப்படும் மின்வெட்டால் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கூட விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை.​ இதனால் பல லட்சம் ஏக்கர் நிலம் தரிசாக மாறியுள்ளன.

​ மாற்றுப்பாசன ஆதாரங்கள் இல்லாததால் திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

​ இந் நிலையில்,​​ அரசு மின்வாரியத்தை மூன்றாகப் பிரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.​ இது கிராமப்புற மின் வழங்கல் மற்றும் மின்பராமரிப்பை பாதித்து விவசாயம் கேள்விக்குறியாக மாறும் நிலையை உருவாக்கும்.

​ எனவே மின்வாரிய சீரமைப்பு நடவடிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும்.​ இதுவரை செயல்பட்டது போலவே இனியும் தமிழ்நாடு மின்வாரியம் செயல்பட வேண்டும்.​ விவசாயத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்.​ ஏற்கெனவே மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

​ மாநாட்டில் கே.பாலபாரதி எம்.எல்.ஏ.​ வரவேற்றுப் பேசினார்.​ மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார்.​ ​ மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்து என்.ஆர்.ராமசாமி பேசினார்.

​ தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே.​ பாலகிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்தார்.​ அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே.வரதராஜன்,​​ மாநிலத் தலைவர் ஜீ.வீரய்யன்,​​ மாநிலச் செயலர் ஆர்.சந்திரா,​​ மார்க்சிய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் என்.பாண்டி உள்பட பலர் பேசினர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports