நிலக்கடலையில் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பம் - நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி

எந்தப்பயிரிலும் நிறைவான மகசூல் கிடைக்க வேண்டும் என்றால் சரியான பட்டத்தில் பயிரிட வேண்டும். நிலக்கடலைக்கு மானாவாரியில் ஆடிப்பட்டமும், இறவையில் மார்கழி பட்டமும் சிறந்தது. மார்கழி பட்டம் என்பது நவம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 16-ந் தேதி வரை விதைப்பதாகும். இந்த பட்டத்தில் விதைத்து, சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்கும்போது அதிக மகசூல் கிடைக்கிறது.

நிலக்கடலையில் டி.எம்.வி-7,13, வி.ஆர்.ஐ-2,6, கோ.ஜி.என்-4, கோ-3, ஏ.எல்.ஆர்-3 ஆகிய ரகங்கள் பயிரிடலாம்.

விதை நேர்த்தி:

நிலக்கடலையில் விதை மற்றும் மண் மூலம் பரவும் கழுத்தழுகல், தண்டு அழுகல், வேர் அழுகல் ஆகிய நோய்களை கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு கிலோ விதையில் உயிரியல் மருந்தான 10 கிராம் சூடோமோனாஸ், 2 கிராம் கார்பன்டாசிம், 4 கிராம் மாங்கோசெப், 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி (நன்மை செய்யும் பூஞ்சாணம்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கலக்க வேண்டும். பின்னர் 24 மணிநேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். இதனுடன் 2 பொட்டலம் (400 கிராம்) ரைசோபியம், 2 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா, 2 பொட்டலம் அசோஸ்பைரில்லம் ஆகிய உயிர் உரங்களை தேவையான அளவு ஆறிய அரிசிக்கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.

அதை நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம் அதிக பலனை கொடுக்கும். மேலும் விதைத்த 30 நாட்களுக்கு பிறகு ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் அல்லது 1 கிலோ டிரைகோடெர்மா விரிடி மருந்தை மட்கிய குப்பையுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

வேர்கரையான்

வேர்ப்புழு மற்றும் கரையான் உள்ள பகுதிகளில் குளோரோபைரிபாஸ் என்ற மருந்தை ஒரு கிலோ விதைக்கு 12 மில்லி என்ற அளவில் (ஒரு ஏக்கருக்கு சுமார் 750 மில்லி) கலந்து நன்கு உலரவைத்து விதைக்க வேண்டும். இதன் மூலம் பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்கலாம்.

பூச்சி மற்றும் பூஞ்சாணக்கொல்லிகளை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதன் மூலம் சுமார் 1 மாதத்திற்கு பயிர் பாதுகாப்பு கிடைக்கிறது. விதைப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு விதைநேர்த்தி செய்ய வேண்டும். பூச்சி மருந்து மூலம் விதை நேர்த்தி செய்யும்போது முதலில் திரவ வடிவிலான பூச்சிக்கொல்லியையும் அதன் பின்னர் தூள் வடிவிலான மருந்துகளையும் கலக்க வேண்டும்.

உரங்கள்

ஒரு ஏக்கருக்கு 5 டன்கள் (10 வண்டிகள்) என்ற அளவில் நன்கு மக்கிய தொழு உரத்தை கடைசி உழவுக்கு முன்பு இடவேண்டும். மண்பரிசோதனை செய்து பயிருக்கு உரமிடுவது சிறந்தது. இல்லையென்றால் ஒரு ஏக்கர் இறவை நிலக்கடலைக்கு 7:14:21 என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கக்கூடிய 15 கிலோ யூரியா, 85 கிலோ சூப்பர் பாஸ்பேட், 35 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இடவேண்டும். இதை அடியுரமாகத்தான் இடவேண்டும்.

நிலக்கடலை விதைத்தவுடன் நல்ல ஈரம் இருக்கும் நிலையில் 3-வது நாளில் ‘பென்டிமெத்திலின்’ அல்லது ‘புளுகுளோரலின்’ களைக்கொல்லி மருந்தை ஏக்கருக்கு 800 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம். இதனால் அகன்ற இலைக்களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஜிப்சம்

சுண்ணாம்புச்சத்து திரட்சியான காய்கள் உருவாகுவதற்கும், கந்தகச்சத்து எண்ணெய் சதவீதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை (சுமார் 2 மூட்டை) அடியுரமாக இட வேண்டும். அதைத்தொடர்ந்து விதைத்த 45 முதல் 55-வது நாட்களுக்குள் (பூப்பிடிக்க தொடங்கியதும்) 2-வது முறையாக 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாகவும் இடவேண்டும். அப்போது செடிக்கு அடியில் ஒவ்வொரு பயிருக்கும் ஜிப்சத்தை போட்டு மண் அணைப்பதன் மூலம் அதிக காய்கள் பிடிக்கின்றன.

நுண்ணூட்டம்

நிலக்கடலை சாகுபடி செய்யும் பகுதிகளில் பரவலாக நுண்ணூட்ட பற்றாக்குறை தென்படுகிறது. இதனால் இலை சுருங்குதல், வெளிர்பச்சை அல்லது மஞ்சள் நிறமாகுதல், திட்டுத்திட்டாக வெளுத்துபோகுதல், பூ உதிர்தல் ஆகிய அறிகுறிகள் ஏற்படுகிறது. இதைத்தடுக்க ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நிலக்கடலை நுண்ணூட்டத்தை, விதை விதைத்தவுடன் மணலில் கலந்து மேலாக தூவவேண்டும். இந்த நுண்ணூட்டம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கிறது. பயிர் வளர்ந்த நிலையில் நுண்ணூட்டப்பற்றாக்குறை தென்பட்டால் ஒரு கிலோ டி.ஏ.பி உரத்தை ஒரு நாள் ஊறவைத்து அதை வடிகட்ட வேண்டும். அந்த கரைசலுடன் 400 கிராம் அம்மோனியம் சல்பேட், 200 கிராம் போராக்ஸ், 180 மில்லி பிளோனோபிக்ஸ் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

மேற்கண்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிலக்கடலையில் அதிக மகசூல் பெறமுடியும்.

இந்த தகவலை நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்து உள்ளார்.

Views: 1238

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2017   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service