காய்கறி பயிர்களில் உயிரியல் நோய் கட்டுப்பாடு

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூஞ்சாண கொல்லிகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இயற்கையான முறையில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, புடல், பீர்க்கங்காய், அவரை ஆகிய பயிர்களில் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

தங்கும் நஞ்சுகள்

காய்கறிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்த இடப்படும் பூஞ்சாண கொல்லிகள் காய்கறிகளில் தங்கிவிடும் போது அவை அவற்றை உண்போருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகி விடுகிறது. இதனால் ரசாயனங்களுக்கு பதிலாக இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. உயிரியல் நோய் கட்டுப்பாட்டு முறையில் காய்கறிகளில் பூஞ்சாணங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, பயிர்களுக்கு சூடோமோனஸ் புளுரசன்ஸ் என்ற பாக்டீரிய எதிர் உயிரியும், டிரைகோடெர்மா விரிடி என்ற பூஞ்சாண எதிர் உயிரியும் நன்மை செய்பவையாக உள்ளன. இவைகளை கொண்டு காய்கறி பயிர்களை தாக்கும் பல நோய்களை கட்டுப்படுத்தலாம்.

நாற்றழுகல் நோய்

பூஞ்சாணம் முதலில் விதைகளை தாக்கி அழுகச் செய்து அவற்றை முளைக்காமல் செய்யும். இதனால் பாத்திகளில் ஆங்காங்கே நாற்றுக்கள் இன்றி இடைவெளி அதிகமாக காணப்படும். இரண்டாவதாக, இந்த பூஞ்சாணம், முளைத்து வந்த நாற்றுக்களின் தண்டு பகுதியை தாக்கி மடிய செய்கின்றது. இதனால் தண்டுப்பாகம் வலுவிழந்து நாற்றுக்கள் சாயும்.

வாடல் நோய் அறிகுறிகள்

இந்நோய் தாக்கிய செடிகளில் அடிப்புற இலைகள் முதலில் மஞ்சளாகி பின்னர் இளம் இலைகளும் நிறம் மாறி காணப்படும். அதன் பின்னர் இலைகள் வாடி தொங்கத் தொடங்கும். பாதிக்கப்பட்ட செடியின் தண்டின் உட்பகுதி பழுப்பு நிறத்துடன் காணப்படும்.

வேர் அழுகல் நோய் அறிகுறிகள்

இந்நோயுற்ற செடியின் இலைகள் மஞ்சளாகி வாடி தொங்கும். நோய் தாக்கி செடிகளை எளிதில் பிடுங்கி விடலாம். உரிந்த வேர்ப்பட்டையின் மேல் பூசண வித்துக்கள் காணப்படும்.சூடேமோனஸ் புளுரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை விதையுடன் கலந்து விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைகளை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

மண்ணில் இடுதல்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 2.5 கிலோ சூடோமோனஸ் புளுரசன்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து கடைசி உழவின் போது மண்ணில் இட்டு பின்னர் நாற்றுக்களை நடவு செய்யலாம். நன்மை செய்யும் இந்த எதிர் உயிரிகள் மண்ணில் பெருக்கம் அடைந்து நோய்க்கிருமிகளுடன் போட்டியிட்டு அழிக்கின்றன.

நாற்றுகளை நனைத்து நடுதல்

நாற்றுகளை நடும் முன்பு சூடோமோனஸ புளுரசன்ஸ் 5 சத கரைசலில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து நடும்போது நாற்றுக்களின் வளர்ச்சி சீராகவும், நோய்களுக்கு எதிராகவும் உள்ளது.

இலைவழி தெளித்தல்

சூடோமோனஸ் பவுடர் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைப்பரப்பின் மீது தெளிப்பதால் இலைகளில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் மிளகாய் பழ அழுகல் ஆகிய நோய்களை தடுக்கலாம்.எனவே, விவசாயிகள் மேற்கண்ட முறைகளில் காய்கறி பயிர்களில் நோய் மேலாண்மையை கடைப்பிடித்து சுற்றுச்சூழலை காப்பதுடன் அதிக லாபம் பெறலாம்.

Views: 1729

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2017   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service